| ADDED : மார் 28, 2024 01:51 AM
ராமேஸ்வரம்:ராமேஸ்வரத்தில் உறவினர்களுக்குள் ஏற்பட்ட அடிதடியில் 3 பெண்களை நேற்று இரவு 8:30 மணி வரை போலீசார் கஸ்டடியில் வைத்து இருந்ததால், உறவினர்கள் சாலை மறியல் செய்தனர். இதனால் அப்பகுதியில் பதட்டம் ஏற்பட்டது.ராமேஸ்வரம் மாங்காட்டைச் சேர்ந்தவர் காயத்ரி 30. கணவர் கருணாமூர்த்தி வெளிநாடு சென்று விட்டு சில தினங்களுக்கு முன் ஊருக்கு திரும்பினார். இதுகுறித்து உறவினர்கள் காயத்ரியிடம் கேட்டதில் வாக்குவாதம் ஏற்பட்டு அடிதடியாக மாறியது. இதில் காயத்ரி, கருணாமூர்த்தி காயமடைந்து ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.இதுதொடர்பாக ராமேஸ்வரம் போலீஸ் எஸ்.ஐ., ராஜ்குமார், போலீசார் நேற்று காலை 5:00 மணிக்கு மாங்காடு சென்று தங்கமாரி 55, சுதந்தினி 34, சத்யா 33, ஆகியோரை விசாரணைக்கு போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்தனர். ஆனால் சம்பவத்தில் தொடர்புடைய இருவரை வழக்கறிஞர் விமல்ராஜ் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்து பெண்களை விடுவிக்கும்படி கூறினார். போலீசார், தங்க செயின் காணாமல் போனதால் 3 பெண்களை கைது செய்ய வேண்டிய சூழல் உள்ளது என தெரிவித்தனர். நேற்று இரவு 8:30 மணி வரை பெண்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தாமல் போலீஸ் ஸ்டேஷனில் வைத்து இருந்தனர். ஆத்திரமடைந்த உறவினர்கள் மதுரை, தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் மறியல் செய்தனர். ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அவ்வழியாக பிரசாரம் செய்த அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் மணிகண்டன், அன்வர்ராஜா, மாவட்ட செயலாளர் முனியசாமி போலீசாரிடம் பேசினர். சம்பந்தப்பட்ட இருவரை போலீசில் ஒப்படைத்துவிட்டு, பெண்களை அழைத்துச் செல்ல போலீசார் ஒப்புக்கொண்டனர். இதன்பின் மறியல் வாபஸ் ஆனது.