உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / களை எடுக்கும் லஞ்ச ஒழிப்புத்துறை   ராமநாதபுர அரசு அதிகாரிகள் கலக்கம்

களை எடுக்கும் லஞ்ச ஒழிப்புத்துறை   ராமநாதபுர அரசு அதிகாரிகள் கலக்கம்

திருவாடானை: ராமநாதபுரம் மாவட்டத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் லஞ்சம் வாங்கும் அதிகாரிகளை களை எடுத்து வரும் நடவடிக்கையால் கீழ் மட்டம் முதல் உயர்மட்ட அதிகாரிகள் வரை கலக்கத்தில் உள்ளனர்.திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம் உட்பட பல்வேறு பகுதியில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனை நடத்தி லஞ்சம் வாங்கும் அதிகாரிகளை கையும் களவுமாக பிடித்து வருகின்றனர். சில மாதங்களுக்கு முன்பு ஆர்.எஸ்.மங்கலத்தில் ரியல் எஸ்டேட் அதிபரிடம் பட்டா மாறுதலுக்காக ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கிய தாசில்தார் தென்னரசு கைது செய்யப்பட்டார். சில நாட்களுக்கு முன்பு தொண்டி போலீஸ்ஸ்டேஷனில் ஒருவரை வழக்கிலிருந்து ஜாமினில் விடுவிப்பதற்காக ரூ.2000 லஞ்சம் வாங்கிய எஸ்.எஸ்.ஐ., ராமகிருஷ்ணன் கைது செய்யப்பட்டார். இதே போல் ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு அரசுத் துறைகளில் கீழ் மட்ட அலுவலர்கள் முதல் உயர் அதிகாரிகள் வரை லஞ்சம் வாங்கி பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். லஞ்சம் அதிகரிப்பது குறித்து தினமலர் நாளிதழ் அடிக்கடி செய்தி வெளியிட்டு சுட்டிக்காட்டி வருகிறது. இதை மெய்பிக்கும் விதமாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடவடிக்கை தீவிரமடைந்துள்ளது. இந்த உஷார் நடவடிக்கையால் மக்களும், சமூக ஆர்வலர்களும் போலீசாரை பாராட்டி வருகின்றனர். அனைத்து அரசுத்துறை அலுவலர்களும் எந்த நேரத்தில் யார் வருவார்களோ என நடுங்கிப் போய் உள்ளனர். ஏனென்றால் அலைபேசி புகாரை வைத்தே லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்துகின்றனர். இதனால் யார் எப்போது மாட்டிக் கொள்வோம் என லஞ்சத்திற்கு துணை போகும் அனைவரும் பீதியில் உறைந்து போய் உள்ளனர். எது எப்படியோ லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் நடவடிக்கையால் மக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்