உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / நினைவில் நீங்கா இடம்பிடித்த முதல் ஓட்டு

நினைவில் நீங்கா இடம்பிடித்த முதல் ஓட்டு

தினமலர் தேர்தல் களம் சிறப்பு

ஆர்.ஸ்வேதா 18, கல்லுாரி மாணவி, பாரதிநகர், ராமநாதபுரம்: முதல் முறை என்பதால் ஓட்டளிக்க ஆர்வமாக இருந்தேன். மாலை வரை காத்திருக்காமல் முதல் ஆளாக காலையில் அம்மாவுடன் ஓட்டுச்சாவடிக்கு வந்து விட்டேன். தினமலர் நாளிதழ் வீட்டில் வாங்குகிறோம். அதில் வெளிவந்த தேர்தல் களத்தை அன்றாடம் தவறாமல் படித்து தேர்தல் செய்திகளை தெரிந்து கொண்டேன். இந்த தேர்தலில் நானும் ஒரு வாக்காளராக எனது ஜனநாயக கடமை நிறைவேற்றியுள்ளேன்.பிரதமரை தேர்வு செய்யும் இந்த தேர்தலில் நாட்டும், நமக்கும் நன்மை செய்பவருக்கு ஓட்டளித்தேன். நல்ல எம்.பி.,யை தேர்வு செய்வதில் எனது பங்கும் இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது.

எதிர்காலம் இளைஞர்கள் கையில்

எஸ்.டி.அக் ஷயா, மருத்துவக்கல்லுாரி மாணவி, பரமக்குடி: ஈரோடு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லுாரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறேன். தற்போது முதல் முறையாக லோக்சபா தேர்தலில் ஓட்டளித்துள்ளேன். என்னுடைய ஜனநாயக கடமையை உணர்ந்து ஈரோட்டில் படிக்கும் நான் பரமக்குடியில் உள்ள எனது ஓட்டுச்சாவடி மையத்திற்கு சென்று ஓட்டளித்தேன். இது எனக்கு மிகுந்த சந்தோஷத்தை அளித்துள்ளது. மேலும் வரும் காலம் இளைஞர்களின் கையில் என்ற அடிப்படையில் இந்த ஜனநாயக கடமையைஆற்றி உள்ளேன். இளைஞர்களுக்கு அதிக வேலை வாய்ப்பையும், ஊக்கத்தையும் அளிக்கும் வகையில் எதிர் வரும் அரசு அமைய வேண்டும் என விரும்புகிறேன்.

மகிழ்ச்சியான அனுபவம்-----------------------------------

எஸ்.மகாலட்சுமி, கல்லுாரி மாணவி, திருப்புல்லாணி:-------------- முதன் முதலில் ஓட்டளிக்க சென்றது மகிழ்ச்சிக்குரிய அனுபவமாக இருந்தது. நாம் போடும் ஒரு ஓட்டு மக்கள் பிரதிநிதியாக லோக்சபா தேர்தலில் வேட்பாளராக நிற்பவருக்கு செல்வது நமது ஜனநாயக கடமையில் முக்கிய அம்சமாக உள்ளது.காலை 8:00 மணிக்கு அருகில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிக்கு சென்று ஓட்டு செலுத்தியது சந்தோஷமாக இருந்தது. நாட்டின் எதிர்காலம் கருதி எனது ஓட்டை செலுத்தி உள்ளேன். வெற்றிபெற்றவுடன் மக்களின் தேர்தல் வாக்குறுதியை படிப்படியாக நிறைவேற்ற வேண்டும். அதுதான் வாக்காளர்களுக்கு செய்யக்கூடிய சிறந்த கடமையாக கருதப்படும்.

நீண்டநாள் கனவு நிறைவேறியது

டி.ஹரிபால விஷால், கல்லுாரி மாணவர், முதுகுளத்துார்: ஒவ்வொரு தேர்தலை சந்திப்பதையும் மிகப்பெரிய சவாலான காரியமாக கட்சிகள் கருதி வருகின்றனர். இந்த சூழ்நிலையில் முதல் முறையாக ஜனநாயக கடமையை ஆற்றியது மகிழ்ச்சி அளிக்கிறது. காலையில் வரிசையில் காத்திருந்த போது ஒருவிதமான​பதட்டம் இருந்தது.பின்பு அங்கிருந்த அதிகாரிகளிடம் தெளிவாகக் கேட்டு தெரிந்த பின் வாக்களித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. இது ஒரு புது அனுபவமாகவும் உள்ளது.எனது நீண்ட நாள் கனவு நிறைவேறியது. வரும் காலத்தில் வெற்றி பெற்று ஆட்சியில அமரும் ஆட்சியாளர்கள் மக்களுக்கு தேவையான திட்டங்களை முறையாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மீனவர் பிரச்னைக்கு தீர்வு காணும் அரசு தேவை

கே.ஹரிகரன், கல்லுாரி மாணவர், ராமேஸ்வரம்: முதன் முதலாக ஜனநாயக கடமை ஆற்றியதற்கு பெருமைப்படுகிறேன். நான் நல்ல தலைவருக்கு ஓட்டு போட்டேன். நம் நாடு பொருளாதாரம், தகவல் தொழில் நுட்பத்துறையில் முன்னேற்றம் அடைய அயராதுஉழைப்பவர் தான் ஆட்சியில் அமர வேண்டும். இந்தியாவை வல்லரசாக உயர்த்தவும், பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு பெற்ற நாடாக மாற்றவும், இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்பு திட்டத்தை உருவாக்கும் பிரதமரே மத்தியில் ஆட்சி அமைக்க வேண்டும். தினமும் இலங்கை கடற்படையால் பாதிக்கப்படும் தமிழக மீனவர்கள் பிரச்சனைக்கு தீர்வு காணும் அரசு அமைய வேண்டும்.

வயதானவர்கள் வரிசையில் நின்றனர்

ஏ.விக்னேஷ், பட்டதாரி, திருவாடானை: எனது பெற்றோர், தாத்தா ஓட்டு போட்டதை பார்த்து இருக்கிறேன். முதல் முறையாக நான் வேட்பாளர்களின்செயல்பாடுகளை பார்த்து ஓட்டளித்துள்ளேன். ஜனநாயக கடமை ஆற்றியது எனக்கு பெருமையாக உள்ளது. அனைவரும் ஓட்டளிக்க வேண்டும்.இந்த தேர்தலில் வயதானவர்கள் எல்லாம் வரிசையில் நின்று ஓட்டு போட வந்தனர். அவர்களை பார்க்கும் போது ஓட்டு போடுவது எவ்வளவு முக்கியமானது என்பதை அறிந்தேன். அவர்கள் சலிப்படையாமல் நீண்ட நேரம் நின்று ஓட்டளித்தனர். நானும் முதல் முறையாக எனது கடமையை ஆற்றியதில் மகிழ்ச்சியாக உள்ளது. ஒவ்வொரு ஓட்டும் முக்கியமானது. தவறாமல் ஓட்டளிக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை