உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ஆடி மாதம் முழுவதும் நடை அடைத்திருக்கும் எஸ்.தரைக்குடி உமையநாயகி அம்மன் கோயில்

ஆடி மாதம் முழுவதும் நடை அடைத்திருக்கும் எஸ்.தரைக்குடி உமையநாயகி அம்மன் கோயில்

சாயல்குடி : சாயல்குடி அருகே எஸ்.தரைக்குடி உமைய நாயகி அம்மன் கோயிலில் ஆடி மாதம் முழுவதும் நடை அடைக்கப்பட்டிருக்கும் நடைமுறை காலம் காலமாக பின்பற்றப்படுகிறது. பழமையும் புரதான சிறப்பும் பெற்ற உமைய நாயகி அம்மன் கோயிலில் மூலவர் உமையநாயகி அம்மன் கூரையில்லாத கட்டடத்தில் வெயிலிலும், மழையிலும் திருமேனி படும் வண்ணம் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். நேற்று ஆனி 32 நிறைவு நாளை முன்னிட்டு மாலையில் மூலவர் அம்மனுக்கு 18 வகை அபிஷேகம், ஆராதனைகளுக்கு பின் மாலை 6:30 மணிக்கு கோயில் நடை அடைக்கப்பட்டது.இங்கு ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் முழுவதும் மூலஸ்தானம் மற்றும் பிரகார மண்டபம் அடைக்கப்படுவது வழக்கமாக உள்ளது. அச்சமயத்தில் பக்தர்கள் யாரும் உமையநாயகி அம்மன் கோயிலுக்கு செல்வதில்லை. ஆவணி மாதம் முதல் நாளில் நடக்கும் அம்மனின் முதல் பார்வை நிகழ்ச்சியில் பல ஆயிரம் பக்தர்கள் கூடுவார்கள். கோயில் நிர்வாகிகள் கூறியதாவது: பல நுாறு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இந்த நடைமுறை கோயிலில் பின்பற்றப்படுகிறது. ஆடி மாதம் என்றாலே அம்மனுக்கு விசேஷ பூஜைகளும், கூழ் காய்ச்சி ஊற்றுதல், முளைப்பாரி, முளைக்கொட்டு உற்ஸவம் உள்ளிட்ட விசேஷங்கள் கிராமங்கள் தோறும் நடக்கும். ஆனால் அதற்கு விதிவிலக்காக இங்கு கோயில் நடை அடைக்கப்படுகிறது. இங்கிருந்து ராமேஸ்வரத்தில் உள்ள தீர்த்தங்களில் புனித நீராடுவதற்காக அம்மன் செல்வதாக ஐதீகம் உள்ளது. அதுவரை ஆடி மாதம் முழுவதும் கோயில் கதவு பூட்டியே வைக்கப்பட்டிருக்கும். முன்பு கருவறை வாசல்படி முன்பு பச்சரிசி தவிடு பரப்பப்பட்டு வெளியே சென்று திரும்பிய அம்மன் திருவடி பாதச்சுவடு தென்பட்டுள்ளதாக புராண வரலாறு கூறப்படுகிறது. காலம் காலமாக இந்த நடைமுறையை கடைப்பிடித்து வருகின்றனர்.ஆடி மாதம் நிறைவிற்கு பிறகு ஆவணியில் திரளான பக்தர்கள் முதல் பார்வை எனப்படும் சிறப்பு பூஜையில் பங்கேற்கின்றனர். ஏற்பாடுகளை கோயில் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை