| ADDED : பிப் 01, 2024 06:52 AM
தொண்டி தொண்டியில் நடந்த மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் சாலை வசதி, பாலம் கட்டுதல் போன்ற அடிப்படை வசதிகள் கேட்டு பொதுமக்கள் அளித்த மனுக்களுக்கு நிதி ஒதுக்கீட்டிற்காக சம்பந்தப்பட்ட அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.மக்கள் நலன் கருதி தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதில் மக்களுடன் முதல்வர் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. அரசு அலுவலகங்களை அன்றாடம் அணுகும் பொதுமக்களுக்கு அரசின் சேவைகள் விரைவாகவும், எளிதாகவும் அவர்களை சென்றடையும் திட்டமாகும் இது. திருவாடானை தாலுகா தொண்டி பேரூராட்சி சார்பில் ஜன.11 ல் இத்திட்ட முகாம் தொண்டி தனியார் மகாலில் நடந்தது. முகாமில் சுகாதாரத்துறை, வீட்டுவசதி, காவல் துறை, சமூக நலத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, வருவாய்த்துறை, மின்வாரியம், பேரூராட்சி, இ-சேவை மையம், அரசு கட்டுமானம் மற்றும் ஓட்டுநர் அமைப்பு சாரா நல வாரியம், வாழ்வாதர கடன் உதவி, மாற்றுத்திறானிகள் நலத்துறை போன்ற அரசுத்துறை சார்பில் தனி, தனியாக இடம் ஒதுக்கப்பட்டு அலுவலர்கள் நியமிக்கப்பட்டனர். பொதுமக்களிடமிருந்து 508 மனுக்கள் பெறப்பட்டது. அனைத்து மனுக்களும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பேரூராட்சி அலுவலர்கள் கூறியதாவது:பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களை துறை அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டு, பெரும்பாலான மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாலம் கட்டுதல், சாலை வசதி உள்ளிட்ட வசதிகளை கேட்டு அளித்த மனுக்கள் மீது நிதி ஒதுக்கீட்டிற்கு பின் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.