பாம்பன் பாலத்தில் இரும்பு தட்டு சேதம்: பயணியர் பீதி
ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் அருகே பாம்பன் கடலில், 1988ல் அமைத்த தேசிய நெடுஞ்சாலை பாலம் வழியாக தினமும் ஏராளமான வாகனங்களில் மக்கள் ராமேஸ்வரம் கோவில், தனுஷ்கோடிக்கு வந்து செல்கின்றனர். முக்கியத்துவம் வாய்ந்த இப்பாலத்தில் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை மராமத்து செய்து வரும் நிலையில், 2022ல் பாலத்தில் சேதமடைந்த தடுப்புச்சுவர், துாண்களை புதுப்பித்து வர்ணம் பூசப்பட்டது.இந்நிலையில், பாலத்தின் நடுவில் உள்ள, பிங்கர் ஜாயின்ட் எனும் இரும்பு பிளேட் மூன்று மாதத்திற்கு ஒருமுறை சேதமடைவது வழக்கமாக உள்ளது. தற்போது இந்த இரும்பு பிளேட் சேதமடைந்து விலகி கிடப்பதால், அதை வாகனங்கள் கடந்து செல்லும் போது, சத்தம் எழுகிறது. அப்போது வாகனத்தில் பயணிக்கும் மக்கள் அச்சத்துடன் செல்கின்றனர். கனரக வாகனங்கள் செல்லும் போது நடு பாலத்தில் அதிர்வு ஏற்படுகிறது. சேதமடைந்த இரும்பு பிளேட்டை சரி செய்ய அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.தற்போது வாகனங்கள் போக்குவரத்து அதிகமாக உள்ளதால் பாலம் பலமிழக்கும் அபாயம் உள்ளது. போக்குவரத்தை இருவழிப் பாதையாக மாற்ற புதிய பாலம் கட்டாயம் என, சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.