மேலும் செய்திகள்
விதை விற்பனை நிலையங்களில் கண்காணிப்பு தீவிரம்
24-May-2025
ராமநாதபுரம்: ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் 2025-26ம் ஆண்டில் உரிமம் பெற்றுள்ள அரசு, தனியார் விற்பனையாளர்களிடமிருந்து, தலா 650 விதை மாதிரிகள் சேகரிப்பு செய்து, தரமான விதையை விவசாயிகளுக்கு விற்பனை செய்ய உள்ளனர். இதுகுறித்து ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களின் விதை ஆய்வு துணை இயக்குநர் இப்ராம்ஷா கூறியிருப்பதாவது: விவசாயிகளுக்கு பல்வேறு பயிர்களின் விதைகள் தரமிக்கவையாக கிடைத்திட விதைச்சான்றளிப்பு, உயிர்மச்சான்றளிப்புத் துறை தக்க நடவடிக்கை எடுத்துள்ளது. தரமான விதையை கண்டறிய அதை பரிசோதனை செய்கிறோம். ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் விதை விற்பனை செய்யும் தனியார், அரசு நிறுவனங்களில் விதை ஆய்வாளர்கள் மூலம் விதை மாதிரிகளை சேகரித்து பரமக்குடி, சிவகங்கையில் உள்ள விதைப் பரிசோதனை நிலையங்களுக்கு அனுப்புகிறோம். அங்கு பரிசோதனையில் பிற பயிர்கள், களைகள், இதரப்பொருட்களின் கலப்பு மற்றும் முளைப்புத்திறன் போன்ற காரணிகள் ஆராயப்படுகின்றது. தரமற்ற விதை என பரிசோதனை முடிவில் தெரிய வந்தால் உடனடியாக குறிப்பிட்ட விதைக்கு விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டு துறை நடவடிக்கை அல்லது நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படும். விதை விற்பனை தொடர்புடைய ஆவணங்கள் அனைத்தும் ஆய்வு செய்யப்படுகிறது.இவ்வாண்டு (2025--26) ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் விதை உரிமம் பெற்றுள்ள விற்பனையாளர்களிடமிருந்து தலா 650 விதை மாதிரிகள் சேகரிப்பு செய்து பரிசோதனை செய்து, தரமான விதைகளை விவசாயிகளுக்கு விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றார்.
24-May-2025