| ADDED : ஆக 20, 2024 07:29 AM
ராமநாதபுரம் : ஆன்மிக தலமான சேதுக்கரை கடலில் மிதக்கும் கழிவு துணிகள் உள்ளிட்டவற்றை அகற்றி துப்புரவு பணி செய்யாத ஊராட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தால் பக்தர்கள் வேதனையடைகின்றனர்.ராமநாதபுரம் மாவட்டத்தில் திருப்புல்லாணி அருகே சேதுக்கரை ராமாயண வரலாற்றில் தொடர்புடைய கடற்கரை என்பதால் பக்தர்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு பரிகார பூஜைகள் செய்கின்றனர். இங்குள்ள சேதுபந்தன ஜெயவீர ஆஞ்சநேயர் கோயில் பிரசித்தி பெற்றது.கோயில் முன்புள்ள கடற்கரையில் பக்தர்கள் நீராடி விட்டுச்செல்லும் துணிகள், பூக்கள், இலைகள் உள்ளிட்ட கழிவுகள் மிதந்து நீராடுவோரின் முகத்திலும், கை, கால்களிலும் சுற்றுவதால் பக்தர்கள் வேதனையடைகின்றனர். ஆன்மிக தலமான இந்த கடற்கரையை சுத்தம் செய்து பராமரிப்பதில் ஊராட்சி நிர்வாகம் அலட்சியம் காட்டுகிறது.சேதுக்கரை கடற்கரை முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் செய்வதற்கா முக்கி ஸ்தலமாக இருப்பதால் தினம் தோறும் அதிகளவில் பக்தர்கள் வருகின்றனர். இறந்தவர்களின் அஸ்தியை சேதுக்கரை கடலில் கரைத்து வழிபட்டு காரியங்கள் செய்வது சிறப்பு வாய்ந்தது0.இதனால் வெளி மாவட்டங்களில் இருந்து தினமும் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். இங்கு கடலில் குளிக்கும் போது தங்களது பழைய துணிகளை கடலில் விட்டுச் செல்கின்றனர். இந்த பழைய துணிகளின் கழிவுகள் அதிகளவில் கரைகளில் கிடக்கின்றன. இதனை அப்புறப்படுத்தாமல் உள்ளனர்.ஏற்கனவே சேகரிக்கப்பட்ட துணிகள், தர்ப்பணம் கொடுப்பவர்கள் பயன்படுத்தும் கலயங்கள் கடற்கரைப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளன. இதனால் இப்பகுதியில் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. தர்ப்பணம் கொடுக்கும் பக்தர்கள் புனித நீராட செல்லும் போது கடற்கரையில் கழிவுகளை பார்த்து வேதனையடைகின்றனர். கழிவுகள் நீரில் மிதப்பதாலும், கரையில் குவிந்து கிடப்பதாலும் புனித நீராட முடியாமல் தவிக்கின்றனர். ஊராட்சி நிர்வாகத்தினர் இது போன்ற ஆன்மிக சுற்றுலா தலங்களில் துப்புரவு பணியாளர்களை நியமித்து உடனுக்குடன் கழிவுகளை சேகரித்து தினசரி அப்புறப்படுத்த வேண்டும்.அப்போது தான் நிம்மதியாக பக்தர்கள் புனித நீராட முடியும். கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.-------------