ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் நகராட்சியில் தி.மு.க., கவுன்சிலர் விலகி பா.ஜ.,வில் இணைந்த நிலையில் மேலும் சில தி.மு.க., கவுன்சிலர்கள் அதிருப்தியில் விலக திட்டமிடுவதால் தி.மு.க., மேலிடம் அதிர்ச்சியில் உள்ளது. ராமேஸ்வரம் நகராட்சியில் 21 கவுன்சிலர்களில் தி.மு.க., 18, அ.தி.மு.க., 3 பேர் உள்ளனர். இதில் 6 அ.தி.மு.க., கவுன்சிலர்களில் 3 பேரும், சுயேச்சை கவுன்சிலர்கள் 4 பேரும் தி.மு.க.,வில் ஐக்கியமாகினர். அசுர பலத்துடன் ராமேஸ்வரம் நகராட்சி மற்றும் நகரில் வலம் வந்த தி.மு.க.,வில் தற்போது உள்கட்சி பூசலால் 'பேஸ்மட்டம் வீக்' ஆகியுள்ளது. இதன் விளைவு, ராமேஸ்வரம் நகராட்சி சீர்கேடு, தி.மு.க. வின் ஹிந்து விரோத போக்கை கண்டித்து டிச., 14ல் தி.மு.க., கவுன்சிலர் சங்கர் விலகி பா.ஜ.,வில் இணைந்தார். மேலும் விலகல் இச்சூழலில் மேலும் சில தி.மு.க., கவுன்சிலர்கள் தங்கள் வார்டுகளில் மக்கள் பிரச்னைக்கு தீர்வு காண முடியாததால் வார்டுக்குள் செல்ல முடியாத சூழல் உள்ளது. இக்குறையை சரி செய்யுமாறு நகராட்சி நிர்வாகம், தி.மு.க., மேலிடத்தில் பல மாதங்களாக முறையிட்டும் எதுவும் நடக்கவில்லை. தற்போது கவுன்சிலர் சங்கர் விலகியதும், விரக்தியடைந்த சில கவுன்சிலர்கள் நாங்களும் கட்சியில் இருந்து விலகி விடுவோம் என தி.மு.க., மேலிடத்தில் அதிருப்தியை தெரிவித்தனர். இந்த விலகல் பட்டியலில் 5 கவுன்சிலர்கள் உள்ளதாக எதிர்க்கட்சியினர் கூறுகின்றனர். இதனால் தி.மு.க., தலைவர்கள் பதட்டத்தில், கவுன்சிலர்களை கெஞ்சி சமரசம் செய்து வருகின்றனர். பா.ஜ., ராமநாதபுரம் மாவட்ட தலைவர் முரளிதரன் கூறுகையில், கடந்த 4 ஆண்டுகளில் நகராட்சி வார்டுகளில் மக்கள் பிரச்னைகளுக்கு தீர்வு காணாத நகராட்சி நிர்வாக சீர்கேட்டை கண்டித்தும், சமூக நீதிக்கு எதிராக செயல்படும் தி.மு.க.,வின் ஹிந்து விரோத போக்கை கண்டித்தும் அக்கட்சியில் இருந்து மேலும் சில தி.மு.க., கவுன்சிலர்கள் விலகி பா.ஜ.,வில் இணைவார்கள். இது விரைவில் நடக்கும் என்றார்.