| ADDED : நவ 21, 2025 04:44 AM
சாயல்குடி: சாயல்குடி அருகே பூப்பாண்டியபுரம் மலட்டாறு படுகை எலக்ட்ரானிக்ஸ் பொருட்களின் கழிவுகள் கொட்டும் இடமாக மாறி வருகிறது. மலட்டாற்றில் 2019ல் ரூ.3 கோடியில் தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. இதன் அருகே பழைய தரைப்பாலம் பகுதியில் பிளாஸ்டிக் உள்ளிட்ட எலக்ட்ரானிக் கழிவு பொருட்கள் கொட்டப்படுகிறது. சாயல்குடியைச் சேர்ந்த இயற்கை ஆர்வலர் ராஜபாண்டியன் கூறியதாவது: மலட்டாறில் உள்ள பெரிய தடுப்பணை அருகே கனரக வாகனங்கள் செல்லக்கூடிய பாலத்தின் அடிப்பகுதியில் சேதமடைந்த டிவி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின், கம்ப்யூட்டர், லேப்டாப், மின்விசிறி உள்ளிட்ட அனைத்து எலக்ட்ரானிக்ஸ் தொடர்புடைய மக்காத கழிவு பொருட்களை கொட்டும் இடமாக உள்ளதால் அப்பகுதியில் சுற்றுச்சூழல் மாசுபடும் நிலை ஏற்பட்டுள்ளது. எலக்ட்ரானிக்ஸ் உள்ளிட்ட கழிவு பொருட்களை விவசாயத்திற்கும், பொதுமக்களும் பயன் பெறக்கூடிய ஆற்றுப்பகுதியில் போடுவதை தடுக்க உரிய வழிகாட்டுதலை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றார்.