உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / நெல் கொள்முதல் நிலையங்களில் கூடுதல் வசூல்; அரசு அறிவித்த வெள்ள நிவாரணமும் வரவில்லை

நெல் கொள்முதல் நிலையங்களில் கூடுதல் வசூல்; அரசு அறிவித்த வெள்ள நிவாரணமும் வரவில்லை

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் நெல் அறுவடை பணிகள் துவங்கியுள்ள நிலையில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் முடைக்கு ரூ.70 வசூலிப்பதாகவும், வாங்கிய கடனை அடைக்க வியாபாரிகளிடம் விற்கிறோம். அரசு அறிவித்த வெள்ள நிவாரணமும் வரவில்லை என விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.ராமநாதபுரம் பழைய கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடந்தது. கலெக்டர் விஷ்ணுசந்திரன் தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு முன்னிலை வகித்தார். மாவட்ட வன அலுவலர் ேஹமலதா, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் முத்துகுமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர் தனுஷ்கோடி, வேளாண் துணை இயக்குனர் பாஸ்கரன் மணியன் பங்கேற்றனர்.முன்னதாக வன விலங்குகளால் பயிர் சேதமடைந்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகையை கலெக்டர் வழங்கினார். உரிய ஆதாரங்கள், வருவாய்த் துறை, வேளாண் துறை சான்றிதழ்களுடன் வன அலுவலகத்தில் விண்ணப்பித்தால் மான், காட்டுபன்றிகளால் சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீட்டு தொகை வழங்கப்படும் என மாவட்ட வன அலுவலர் ேஹமலதா தெரிவித்தார்.* கலெக்டர்: மாவட்டத்தில் அறுவடை நடைபெறுவதால் 70 இடங்களில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க ஏற்பாடு செய்துள்ளோம். 1 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்ய விவசாயிகள் ஒத்துழைக்க வேண்டும். தென்னை விவசாயிகள் கோரிக்கையை ஏற்று ரூ.2கோடியில் கொப்பரை கொள்முதல் நிலையம் துவங்கப்பட உள்ளது.* மாவட்ட வருவாய் அலுவலர்: மாவட்டத்தில் மழை அளவை துல்லியமாக கணக்கிட கடலோரங்கள் மட்டுமின்றி பரவலாக 47 இடங்களில் மழைமானிகள் தொழில்நுட்ப வல்லுனர்கள் மூலம் அமைக்கப்பட உள்ளது. * முத்துராமு, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர்: டிச.,ல் பெய்த மழையால் பயிர்கள் சேதமடைந்து விட்டது. விடுப்பட்ட பயிர்களை கணக்கெடுக்க வேண்டும். அரசு அறிவித்த வெள்ள நிவாரணம் என்னாச்சு. * கலெக்டர்: 11,500 எக்டேரில் நெல், 6000 எக்டேரில் மிளகாய் பாதிக்கப்பட்டுள்ளது. அறிக்கையை அரசுக்கு அனுப்பியுள்ளோம். விரைவில் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.* மதுரை வீரன், வைகை பாசன விவசாயிகள் சங்கம், மண்டல தலைவர் பரமக்குடி: வனவிலங்கு பாதிப்பிற்கு நிவராணம் வழங்குவதை வரவேற்கிறோம். இன்று (நேற்று) தினமலர் நாளிதழில் காட்டுமாடுகளால் விவசாயம் பாதிப்பு என செய்தி வெளியாகியுள்ளது. இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். நெல் கொள்முதல் செய்கின்றனர். அதை வைக்க கோடவுன் வசதியில்லை. * நாகரத்தினம், பரமக்குடி: அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் முடைக்கு ரூ.70 வரை கேட்கின்றனர். மேலும் வேண்டியவர்களுக்கு முன்னுரிமை தருகின்றனர். இதனால் வியாபாரிகளிடம் குறைந்த விலைக்கு விற்க வேண்டியுள்ளது.* தனுஷ்கோடி: நெல் கொள்முதல் நிலையத்தில் விற்க ஆன்-லைனில் பதிவு செய்து டோக்கன் பெற வேண்டும். அதன் அடிப்படையில் தான் வாங்குகின்றனர். முறைகேடு நடக்க வாய்ப்பு இல்லை.தென்னை விவசாயிகள் கொப்பரை கொள்முதல் நிலையத்திற்கு வரவேற்றும், ஒத்துழைப்பு வழங்குவதாக பேசினர். மேலும் கண்மாய்கள் துார்வாரவில்லை. கூட்டுறவு சங்கத்தில் பயிர்கடன் குறித்த விபரங்கள் இல்லை. முதுகுளத்துார், கமுதியில் அறுவடை முடியும் தருவாயில் உள்ளது. இதுவரை நெல் கொள்முதல் நிலையங்களை திறக்கவில்லை என விவசாயிகள் பல்வேறு கோரிக்கை, புகார்களை தெரிவித்தனர்.----


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்