பயிர்க்கடன் செலுத்த கால நீட்டிப்பு தேவை: விவசாயிகள் வலியுறுத்தல்
திருவாடானை: பயிர்க்கடனை செலுத்த கால நீட்டிப்பு வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.தமிழகத்தில் தேசிய மயமாக்கப்பட்ட மற்றும் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்கபடுகிறது. அவ்வாறு பெறப்படும் கடன்களை ஓராண்டிற்குள் திருப்பி செலுத்த வேண்டும்.திருவாடானை தாலுகாவில் சில கூட்டுறவு சங்கங்களில் கடந்த ஆண்டு கொடுத்த பயிர்க்கடன் வசூல் ஆகவில்லை என்ற காரணம் காட்டி விவசாயிகளுக்கு கடன் வழங்க மறுப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு கவாஸ்கர் கூறியதாவது:தமிழக அரசு விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்க பட்ஜெட்டில் பல ஆயிரம் கோடி ஒதுக்குகிறது. தற்போது விவசாயப் பணிகள் நடந்து வரும் நிலையில் திருவாடானை தாலுகாவில் உள்ள சில கூட்டுறவு சங்கங்களில் வசூல் ஆகவில்லை என்று புதிதாக கடன் வழங்க மறுக்கப்படுகிறது.இதனால் முறையாக திருப்பி செலுத்திய விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். ஆகவே புதிய பயிர்க்கடன் வழங்க வேண்டும். மேலும் மழையால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளதால் பயிர்க்கடன் செலுத்த ஒரு மாதம் கால நீட்டிப்பு வேண்டும் என்றார்.