உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / சேதுபதி நகரில் வீணடிக்கப்பட்ட அரசு நிதி; குடிநீர் வசதி, கழிவுநீர் கால்வாய் இணைப்பு இல்லை

சேதுபதி நகரில் வீணடிக்கப்பட்ட அரசு நிதி; குடிநீர் வசதி, கழிவுநீர் கால்வாய் இணைப்பு இல்லை

ராமநாதபுரம்; ராமநாதபுரம் அருகே சேதுபதி நகர் குடியிருப்பு பகுதியில் குடிநீர், கழிவுநீருக்கு முறையான இணைப்பு கொடுக்காமல் நீர்தேக்கத் தொட்டி, கழிவுநீர் கால்வாய் அமைக்க பல லட்சம் செலவழித்து அரசு நிதி வீணடிக்கப் பட்டுள்ளது. சேதுபதி நகர் வடக்கு குடியிருப்போர் நல சங்க தலைவர் கணபதி காந்தம், துணைத் தலைவர் நிஜாம் அலிகான், செயலாளர் மணிமாறன், துணைச் செயலாளர் கிருபாகர சேகர், பொருளாளர் அன்புச்செல்வன் ஆகியோர் குடியிருப்பில் உள்ள பிரச்னைகள் குறித்து கூறியதாவது: சேதுபதி நகர் வடக்கு குடியிருப்பு பகுதியில் உள்ள குடியிருப்புகள், மனைகள் வீட்டு வசதி வாரியம் சார்பில் வழங்கப்பட்டது. இந்தப் பகுதியில் குடிநீர் இணைப்புக்காக 30 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் மூலம் ரூ.99 லட்சத்தில் மோட்டார் பம்புடன் கூடிய மேல்நிலை நீர்த் தேக்க தொட்டி கட்டப்பட்டது. ஆனால் ஒரு நாள் கூட எங்கள் குடியிருப்பு பகுதிக்கு குடிநீர் வரவில்லை. இதற்கு முன்பு இருந்த கலெக்டரிடம் இது சம்பந்தமாக புகார் தெரிவித்த பின் 2024ல் ரூ.25 லட்சம் செலவில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அதன் பிறகும் ஒரு நாள் கூட குடிநீர் வரவில்லை. இந்த ரூ.25 லட்சமும் சென்ற முறை வீணடிக்கப்பட்டதை போல் வீணடிக்கப்பட்டது. அதே போல் கழிவு நீர் கால்வாயும் பல லட்சம் ரூபாய் செலவு செய்து முறையான இணைப்பு இல்லாததால் கழிவு நீர் செல்ல வழியில்லாமல் குடியிருப்பு பகுதியில் குளம் போல் தேங்கியுள்ளது. இதனால் மழைக்காலங்களில் தெரு முழுவதும் சாக்கடை நீர் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் இப்பகுதியில் வசிப்போருக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. இது சம்பந்தமாக தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்ட போது, கடந்த 30 ஆண்டுகளாக எவ்விதமான பராமரிப்பு பணிகளும் செய்யப்படவில்லை என பதில் அளித்துள்ளனர். வீட்டு வசதி வாரியம் சார்பில் பணிகள் முடிக்கப்பட்டு உள்ளாட்சி அமைப்பிடம் ஒப்படைத்ததாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசின் நிதி வீணடிக்கப்பட்டது மட்டுமின்றி எந்தவித அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்தி தரவில்லை. குடிநீர் வசதியும், கழிவுநீர் கால்வாயும் சேதுபதி நகருக்கு கொண்டு வர வேண்டும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை