ஹிந்து முன்னணியினர் ராமேஸ்வரத்தில் கைது
ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் கோயில் உள்ளிட்ட சில கோயில்களில் தரிசனத்திற்கு சென்ற பக்தர்கள் உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து ராமேஸ்வரத்தில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்த ஹிந்து முன்னணியினர் 40 பேரை போலீசார் கைது செய்தனர்.ராமேஸ்வரம், திருச்செந்துார், தஞ்சாவூர் கோயில்களில் சுவாமி தரிசனம் செய்ய வரிசையில் சென்ற பக்தர்கள் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் அதிர்ச்சி ஏற்படுத்தியது. தரிசனத்திற்கு கட்டணம் வசூலிக்கும் ஹிந்து சமய அறநிலையத்துறை பக்தர்களுக்கு காற்றோட்டம், குடிநீர், அவசர வழி, முதலுதவி ஆகிய வசதிகள் ஏற்படுத்தாததால் பக்தர்கள் உயிரிழந்துள்ளனர்.இச்சம்பவத்திற்கு காரணமான ஹிந்து சமய அறநிலையத்துறையை கண்டித்து நேற்று ராமேஸ்வரத்தில் ஹிந்து முன்னணி ராமநாதபுரம் மாவட்ட தலைவர் ராமமூர்த்தி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் சக்திவேல், நகர் தலைவர் நம்பிராஜன், நிர்வாகிகள் மேகநாதன், நாராயணன், குமார் மற்றும் பா.ஜ., நிர்வாகிகள் மாரி, சுந்தரமுருகன், ராமநாதன், வி.எச்.பி., மாவட்ட தலைவர் சரவணன் உட்பட பலர் பங்கேற்றனர்.ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி இல்லாததால் போலீசார் கைது செய்த போது ஹிந்து முன்னணியினர் போலீசார் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின் போலீசார் 40 பேரை கைது செய்தனர்.