உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / வல்லபை ஐயப்பன் கோயிலில் கார்த்திகை முதல் நாளில் மாலை அணிந்த பக்தர்கள் சரணகோஷம் முழங்கினர்

வல்லபை ஐயப்பன் கோயிலில் கார்த்திகை முதல் நாளில் மாலை அணிந்த பக்தர்கள் சரணகோஷம் முழங்கினர்

ரெகுநாதபுரம்: ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலில் கார்த்திகை முதல் நாளை முன்னிட்டு நேற்று ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் துவக்கினர்.ஒரு மண்டலம் எனப்படும் 48 நாட்கள் விரதத்தை கடைபிடித்து காலை உணவை தவிர்த்து மதிய உணவை ஐயப்பனுக்கு நிவேதனம் செய்து உண்ணவும், காலை மாலை நேரங்களில் நீராடி, ஐயப்ப பூஜைகள் செய்வதற்கும் விரதம் கடைபிடிக்க துவங்கினர்.வல்லபை ஐயப்பன் கோயிலில் நேற்று அதிகாலை 4:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு மூலவர் மற்றும் உற்ஸவமூர்த்திக்கு அஷ்டாபிஷேகம் நடந்தது. வல்லபை விநாயகர், மஞ்சமாதா, ஆஞ்சநேயர், சங்கரன், சங்கரி உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. இதையடுத்து காலை 5:00 மணி முதல் ரெகுநாதபுரம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான ஐயப்ப பக்தர்கள் துளசி மணி மாலை அணிவதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்து மாலை அணிந்து சென்றனர்.கோயில் தலைமை குருசாமி ஆர்.எஸ்.மோகன் கன்னிசாமிகள் மற்றும் ஐயப்ப பக்தர்களுக்கு மாலை அணிவித்தார். ஐயப்ப சரணகோஷம் முழங்கப்பட்டது. நேற்று முதல் தொடர்ந்து சபரிமலை யாத்திரை செல்லும் வரை 48 நாட்களுக்கு தினமும் பகல் மற்றும் இரவு நேரங்களில் அன்னதானம் வழங்கப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை தோறும் மதியம் பஜனை, கூட்டுப் பிரார்த்தனை உள்ளிட்டவைகள் நடக்க உள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடப்பதை போன்று இங்கும் ஆராட்டு விழா, பேட்டை துள்ளுதல் உள்ளிட்ட நிகழ்வுகள் நடத்தப்படுகிறது.ஏற்பாடுகளை ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயில் சேவை நிலைய அறக்கட்டளையினர் செய்திருந்தனர்.*நேற்று கார்த்திகை முதல் நாளில் திருவாடானை, தொண்டி, சின்னக்கீரமங்கலம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தொண்டி, தீர்த்தாண்டதானம், உப்பூர் கடலில் புனித நீராடி குருசாமி துணையுடன் மாலை அணிந்தனர். மாலை அணிந்த பக்தர்கள் காலை, மாலை குளித்து கோயில்களுக்கு சென்று சரண கோஷம் பாடுவார்கள். கடைகளில் ருத்ராட்ச மற்றும் துளசி மாலைகள் அமோகமாக விற்பனையானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை