| ADDED : நவ 27, 2025 06:36 AM
பரமக்குடி: பரமக்குடியில் இருந்து ராமநாதபுரம் செல்லும் இருவழிச் சாலையில் டோல்கேட் அமைத்து வசூல் செய்யப்படும் நிலையில் அடிப்படை வசதிகளின்றி ஐயப்ப பக்தர்கள், பயணிகள் அவதிப்படுகின்றனர். மதுரையிலிருந்து பரமக்குடி வரை நான்கு வழி சாலை அமைக்கப்பட்டுள்ளது. பரமக்குடி எல்லை அரியனேந்தல் பகுதியில் இருந்து இருவழிச்சாலை தொடர்கிறது. பரமக்குடியில் இருந்து 20 கி.மீ.,ல் இருவழிச் சாலையில் டோல்கேட் செயல்படுகிறது. வழக்கம் போல் இங்கு அனைத்து வகையான வாகனங் களுக்கும் டோல்கேட் வரி வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக ரோட்டோரம் உள்ள கழிப்பறைகள், உணவகம் மற்றும் தங்கும் இடம் என செயல்படாமல் இருக்கிறது. தொடர்ந்து ராமேஸ்வரம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்குச் செல்வோர் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். தற்போது ஐயப்பன் சீசன் துவங்கியுள்ள நிலையில், ஒவ்வொரு நாளும் 50க்கும் மேற்பட்ட வாகனங்கள் கடந்து செல்கின்றன. வரும் நாட்களில் சீசன் களை கட்ட உள்ளதால் மேலும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். இவர்கள் உணவு அருந்த வசதி இல்லாமல் தண்ணீர் கிடைக்கும் இடத்தில் நெடுஞ்சாலையிலேயே வாகனங்களை நிறுத்தி உணவருந்தும் நிலை இருக்கிறது. மேலும் நீண்ட நேரம் ரோட்டில் வாகனங்களை நிறுத்த நேர்வதால் விபத்து அபாயம் அதி கரித்துள்ளது. ஆகவே தொலை துாரத்தில் இருந்து வருபவர்களிடம் டோல்கேட் வரி வசூல் செய்யும் நிலையில், அவர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் தங்கும் இடம் மற்றும் தண்ணீர் வசதி களுடன் கழிப்பறைகளை முறைப்படுத்த வேண்டும், என கோரிக்கை விடுத்து உள்ளனர்.