மண்டபத்தில் நாவாய் அரசு அருங்காட்சியகம் அமைக்க அழகன்குளம் மக்கள் எதிர்ப்பு
ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் நாவாய் அரசு அருங்காட்சியகம் அமைக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும். அதற்குபதிலாகஅழகன்குளத்தில் கண்டெடுத்த பழங்கால பொருட்களுடன் அந்த ஊரில் அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என ஊர் மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.அழகன்குளத்தை சேர்ந்த ஹிந்து முஸ்லிம் ஐக்கிய பரிபாலன சபை நிர்வாகிகள் மற்றும் ஊர்மக்கள் ராமநாதபுரம் கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோனிடம் மனு அளித்தனர். இதில், அழகன் குளத்தில் 1984 முதல் 2016 வரை 8 கட்டங்களாக அகழாய்வு ஆராய்ச்சிகள் நடந்தது. அரசு மேல்நிலைப்பள்ளியில் இரு குழிகள் தோண்டப்பட்டு சங்க காலம், இலக்கிய காலத்தை சேர்ந்த கலைநயமிக்க யானை சிலை, தந்தத்தால் செய்யப்பட்ட ஆபரணங்கள், சுடுமண் பாண்டங்கள், தானியங்களுடன் மதுக்குடுவைகள் என 13ஆயிரம் பொருட்கள் கிடைத்துள்ளன. அவற்றை அழகன்குளத்தில் அருங்காட்சியம் அமைத்து காட்சிப்படுத்த தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இந்நிலையில் ராமேஸ்வரம் அருகே மண்டபத்தில் நாவாய் அருங்காட்சியம் அமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை எதிர்க்கிறோம். கலெக்டர் பரிசீலனை செய்து அழகன்குளத்தில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் அடங்கிய நாவாய் அருங்காட்சியகத்தை அழகன் குளத்தில் அமைக்க வேண்டும். மண்டபத்திற்கு மாற்றம் செய்யக் கூடாது என வலியுறுத்தினர்.