| ADDED : மார் 11, 2024 05:16 AM
ஆர்.எஸ்.மங்கலம்,: ஆர்.எஸ்.மங்கலம் அருகே கொக்கூரணி கிராமத்தில் காவிரி குடிநீர் வராமல் மக்கள் பாதுகாப்பாற்ற குடிநீரை விலைக்கு வாங்கி சிரமப்படுகின்றனர்.காவனக்கோட்டை ஊராட்சியை சேர்ந்த கொக்கூரணி கிராமத்தில் ஏராளமானவர்கள் வாழ்கின்றனர். இங்கு ஊருணிகளோ, குடிநீர் ஆதாரங்களோ இல்லை. முழுமையாக காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தை மட்டுமே மக்கள் நம்பியுள்ளனர். இந்நிலையில், கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக காவிரி கூட்டு குடிநீர் வரவில்லை. வெளியூர்களிலிருந்து விற்பனை செய்யப்படும் பாதுகாப்பற்ற குடிநீரை குடம் ரூ.12 வரை கொடுத்து வாங்கி பயன்படுத்தும் அவல நிலையில் உள்ளனர். சிலர் தங்களது டூவீலர் உள்ளிட்ட வாகனங்களில், நான்கு கி.மீ., தொலைவில் உள்ள தேசிய நெடுஞ்சாலை பகுதிக்கு சென்று அப்பகுதியில் தண்ணீர் பிடிக்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கொக்கூரணி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.