மருத்துவமனைக்குள் தேங்கிய மழை நீர்
ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் பெய்த கனமழையால் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை வளாகத்தில் குளம் போல் மழைநீர் தேங்கியதால் நோயாளிகள் அவதிப்பட்டனர். தென்னிந்திய பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக ராமநாதபுரம் சுற்றுவட்டாரப் பகுதியில் நேற்று மதியம் மழை பெய்தது. ரோட்டின் இருபுறமும் மழைநீர் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதிப்பட்டனர். பழைய பஸ்ஸ்டாண்ட்டில் போதிய இடவசதி இல்லாததல் பலர் கொட்டும் மழையில் பஸ்சுக்காக நனைந்தபடி காத்திருந்தனர். மேலும், அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை வளாகத்தில் மழைநீர் குளம் போல் தேங்கியது. இதனால் மருத்துமனைக்கு வந்த நோயாளிகள் அவதிக்குள்ளாகினர். மருத்துவமனை வளாகத்தில் மழைநீர் வடிகால் வசதியை அவ்வப்போது புனரமைத்து, மழைநீர் தடையின்றி செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என நோயாளிகள் வலியுறுத்தினர்.