உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / தாயமங்கலத்தில் தொடர் திருட்டு : போலீஸ் இல்லாததால் அவலம்

தாயமங்கலத்தில் தொடர் திருட்டு : போலீஸ் இல்லாததால் அவலம்

இளையான்குடி : போலீஸ் ரோந்தில் தொய்வு ஏற்பட்டுள்ளதால் தாயமங்கலம் பகுதியில் திருட்டுக்கள் அதிகரித்துள்ளது. இளையான்குடியிலிருந்து 9 கி.மீ.,தூரத்தில் உள்ளது தாயமங்கலம்.தாயமங்கலத்தை சுற்றி 30 க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது. அன்றாடதேவைகளுக்கு இப்பகுதி மக்கள் தாயமங்கலத்திற்கு வந்து செல்ல வேண்டும். இங்கு பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு தினமும் 200 க்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து செல்கின்றனர். விழா காலங்களில் மட்டும் இங்கு போலீஸ் அவுட் போஸ்ட் அமைக்கப்படும். இரவு நேரங்களில் போலீசார் அடிக்கடி ரோந்து வந்து கோயில் பாதுகாப்பு பணியில் இருக்கும் முன்னாள் ராணுவத்தினர் வருகைப்பதிவேட்டில் கையொப்பம் இடுவதோடு கோயில் வளாகங்களில் கட்டப்பட்டுள்ள திறந்த வெளி மண்டபங்களில் தங்கியிருப்பவர்களையும் விசாரித்து செல்வர். மெயின் கடைவீதியில் இரவு நேரங்களில் தூங்குபவர்களை பிடித்து செல்வர். இதனால் தாயமங்கலம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் திருட்டுக்கள் நடப்பது குறைந்தே காணப்பட்டது. சமீபகாலமாக போலீஸ் பற்றாக்குறை என கூறி தாயமங்கலம் பகுதிக்கு ரோந்து வருவதில் தொய்வு ஏற்பட்டுள்ளதால் தாயமங்கலம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் திருடர்கள் அச்சமின்றி வீடுகளில் புகுந்து திருடி வருகின்றனர். திருட்டுக்கள் குறித்து போலீசில் புகார் கொடுத்தும் திருடர்கள் பிடிபடவில்லை ஆக.19ல் தாயமங்கலத்தில் இரண்டு வீடுகளில் பணம், மொபைல்போன்களை சிலர் திருடி சென்றுள்ளனர். தாயமங்கலம் பகுதிக்கு இரவு நேரங்களில் போலீசார் அடிக்கடி ரோந்து வருவதோடு போலீஸ் அவுட்போஸ்ட் ஒன்று அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை