| ADDED : பிப் 22, 2024 11:17 PM
ராமநாதபுரம் : ராமநாதபுரம்- துாத்துக்குடி கிழக்கு கடற்கரை சாலையோரம் சக்கரகோட்டையில் அமைந்துஉள்ள ராமநாதபுரம் நகராட்சி குப்பைக்கிடங்கு தீப்பற்றி புகை பரவுவதால்அருகில் குடியிருப்புவாசிகள், வாகன ஓட்டிகள் மூச்சுத்திணறலால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். நோய்த்தொற்று அபாயம் உள்ளதால் நிரந்தர தீர்வு காண வேண்டும். ராமநாதபுரம் கிழக்கு கடற்சாலையோரத்தில் நகராட்சி குப்பை கிடங்கு அமைந்துள்ளது. நகரில் 33 வார்டுகளில் தினசரி சேகரிக்கப்படும் 20 டன் குப்பையை குவித்து வைத்து தரம் பிரிக்கப்படுகிறது. இங்குள்ள குப்பையில் தீப்பிடித்து கடந்த 3 நாட்களாக காற்றில் புகை பரவியுள்ளது. பட்டணம்காத்தான் பழைய சோதனைச்சாவடி, கீழசோத்துாருணி, கிழக்கு கடற்சாலை வரை புகை பரவுகிறது. வாகன ஓட்டிகள், பொதுமக்கள்மூச்சுத்திணறலால் பாதிக்கப்படுகின்றனர். இருமல், சுவாசக்கோளாறு, நோய்த்தொற்று அச்சத்தில் மக்கள் உள்ளனர்.எனவே தீயை அணைத்து புகையை கட்டுப்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.மேலும் பட்டணம்காத்தான், சக்கரகோட்டை பகுதியிலும் குப்பைக் கிடங்கு ரோட்டின் இருபுறத்திலும் குப்பையை கொட்டி குவித்து வைப்பதாக புகார் எழுந்துள்ளது.அவற்றை அகற்றி சுத்தம் செய்ய சம்பந்தபட்ட ஊராட்சி நிர்வாகத்தற்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட வேண்டும்.