| ADDED : ஆக 05, 2011 10:09 PM
திருவாடானை:தொண்டி அருகே மணக்குடியில் கட்டப்பட்டு இரண்டு ஆண்டுகளாகியும் சுனாமி வீடுகளில் மக்கள் குடியேறாததால் பல கோடி ரூபாய் வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில் 2004ம் ஆண்டு சுனாமியின் போது தொண்டி கடற்கரையிலும் ஓரளவு சேதம் ஏற்பட்டது. இதையடுத்து சுனாமி அடிப்படை வசதி திட்டம், ராஜிவ் மறுவாழ்வு திட்டங்களின் கீழ் தொண்டி அருகே முள்ளிமுனை, காராங்காடு கிராம கடற்கரைகளில் வசிப்பவர்களுக்காக 2 லட்சத்து 75 ஆயிரம் ரூபாயில் வீடுகள் கட்டப்பட்டன. நம்புதாளை, தொண்டி, மணக்குடி போன்ற பல்வேறு கிராமங்களை சேர்ந்தவர்களுக்கு வீடுகள் ஒதுக்கப்பட்டன. ஆரம்பத்தில் இந்த வீடுகளை பெற பொதுமக்களிடையே கடும் போட்டி ஏற்பட்டது. வீடு கிடைக்காதவர்கள் ராமநாதபுரம் கலெக்டரிடம், 'அதிகாரிகள் லஞ்சம் கேட்பதாக' புகார் தெரிவித்தனர்.இதையடுத்து 300 குடும்பங்கள் தேர்ந்தெடுக்கபட்டு வீடுகளும் ஒதுக்கபட்டன. 30 பேரை தவிர, இரண்டு ஆண்டுகளாகியும் மீதியுள்ளோர் குடியேறவில்லை. இதற்கு சுனாமி வீடுகள், மேற்கண்ட கிராமங்களிலிருந்து 8 கி.மீ., தொலைவில் இருப்பதும், வீடு ஒதுக்கபட்டவர்களில் பெரும்பாலானோருக்கு சொந்த வீடு இருப்பதும், வீட்டிலிருந்து படகுகளை கண்காணிக்கும் வகையில் கடற்கரை ஒட்டி இந்த வீடுகள் இல்லாததே காரணம்.இதனால் பல வீடுகளில் கதவு, ஜன்னல்கள் திருடு போயுள்ளன. மின் கம்பத்திலிருந்து செல்லும் வயர்கள் திருடப்பட்டுள்ளன. வீடுகளை சுற்றி காட்டுகருவேல மரங்கள் அடர்ந்த நிலையில் இரவில் பயப்படும் வகையில் உள்ளன. ஆடுகள் மேய்ப்பவர்கள் தெருக்களில் ஆடுகளை மேயவிட்டு திறந்துகிடக்கும் சுனாமி வீடுகளில் தங்குகின்றனர். பல கோடி ரூபாய் செலவு செய்து கட்டப்பட்ட வீடுகளை பயன்பாட்டிற்கு கொண்டு வர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.