| ADDED : செப் 16, 2011 11:11 PM
ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் அரண்மனை, சாலைத்தெரு, அரசு மருத்துவமனை ரோடு பகுதிகள் தொடர் போக்குவரத்து நெருக்கடியில் சிக்கி தவிக்கின்றன.ராமநாதபுரத்தில் நாளுக்கு நாள் வணிக நிறுவனங்கள் பெருகி வருகின்றன. கீழக்கரை, ஏர்வாடி, பனைக்குளம், ஆர்.எஸ்.மங்கலம், தேவிபட்டினம், திருவாடானை, சாயல்குடி போன்ற பல்வேறு ஊர்களிலிருந்து, ஏராளமானோர் தினமும் பல்வேறு பணி நிமித்தமாக வந்து செல்கின்றனர். 20 ஆண்டுக்கு முன்பு எவ்வாறு ரோடு வசதிகள் இருந்தனவோ, அதே போல்தான் இருக்கின்றன. ஒவ்வொரு முறை, மாவட்ட எஸ்.பி., கலெக்டர் வரும்போது, ராமநாதபுரத்தின் போக்குவரத்து நெரிசலை குறைப்போம் என்று கூறுகின்றனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. ஆளும்கட்சியினரும், ராமநாதபுரத்தின் போக்குவரத்து நெரிசலை குறைக்க உரிய வழிகளை சட்டசபையில் எடுத்துரைக்கவில்லை. அரண்மனை பகுதியில் போக்குவரத்து நெரிசலால், காலை நேரங்களில் பள்ளி மாணவர்கள் பள்ளிக்கு தாமதமாக செல்ல வேண்டிய நிலை உள்ளது. சாலை தெருவில், தள்ளுவண்டி கடைகள் ஆக்கிரமித்துள்ளன. அரசு மருத்துவமனையையொட்டி வாகனங்கள் ரோட்டின் ஓரத்தில் நிறுத்தப்படுவதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அரசு மருத்துவமனையிலிருந்து, புதிய பஸ் ஸ்டாண்ட் செல்வதற்கு 15 நிமிடம் ஆகிறது. எனவே போக்குவரத்து நெரிசலை குறைக்க போலீசார் நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.