| ADDED : ஆக 08, 2024 10:46 PM
ராமநாதபுரம் நகராட்சி அலுவலகத்தில் மாதாந்திரசாதாரண கூட்டம் நடந்தது. தலைவர் கார்மேகம் தலைமை வகித்தார்.கமிஷனர் அஜிதா பர்வின் முன்னிலை வகித்தார். அண்ணா நகர், நாகநாதபுரம் நகராட்சி பாதாள சாக்கடை கழிவுநீர் அகற்றும் நிலையத்தில் 2 ஆண்டுகளாக கழிவு மண் படிந்துள்ளது. இதனால் மோட்டார்களை இயக்குவதில் சிரமம் ஏற்படுவதால் ரூ.2 லட்சத்தில் பணிகள் மேற்கொள்ள தீர்மானம் நிறைவேற்றினர். பின்னர் நடந்த கவுன்சிலர்கள் விவாதம் வருமாறு:குமார், பா.ஜ.,: நகரில் பாதாள சாக்கடை நீர் பல இடங்களில் ஆறாக ஓடுகிறது. பராமரிப்பு பணிக்காக தொடர்ந்து பல லட்சங்களை செலவு செய்கின்றனர். சுத்திகரிப்பு நிலையங்களில் அவ்வப்போது மண் அகற்றினால் குழாய்களில் அடைப்பு ஏற்படுவதை தடுக்கலாம். மேலும் புதிதாக பாதாள சாக்கடை இணைப்பு கேட்டவர்களுக்கு வழங்கவில்லை. ரோடுகள் குண்டும் குழியுமாக உள்ளது. அஜிதா பர்வின், கமிஷனர்: பழைய வீடுகளுக்கு பாதாள சாக்கடை இணைப்பு வழங்கப்படுகிறது. அனுமதியற்ற பிளாட்டுகளுக்கு இணைப்பு வழங்கவில்லை.இந்திராமேரி, அ.தி.மு.க.,: சிங்கார தோப்பு பகுதியில் பாதாள சாக்கடை நீர் தேங்கியுள்ளது. துர்நாற்றத்தால் மக்கள் சிரமப்படுகின்றனர். சுத்திகரிப்பு நிலையத்தில் பம்ப்பிங் செய்வது இல்லை. உடன் சரி செய்ய வேண்டும்.தலைவர்: புதிதாக குழாய்கள் பதிக்கும் பணியால் தாமதம் ஏற்பட்டுள்ளது. சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.காங்., ராஜாராம்பாண்டியன், தி.மு.க., நாகராஜன் ஆகியோரும் தங்களது வார்டுகளில் பாதாள சாக்கடை பிரச்னை உள்ளது. அடைப்பு ஏற்பட்டு ரோட்டில் கழிவுநீர்ஓடுகிறது. முகவை, நீலகண்டி ஊருணி ஆகியவறில் கழிவுநீர் கலக்கிறது. இறைச்சி கழிவுகளை சிலர் கொட்டுகின்றனர்.அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தேவையுள்ள இடங்களில் தெருவிளக்குகள் பொருத்த வேண்டும் என வலியுறுத்தினர். பாதாள சாக்கடை பிரச்னைக்காக புதிதாக குழாய்கள், மோட்டார்கள் மாற்றப்படுகிறது என தலைவர் கூறினார். அப்போது கூட்ட அரங்கில் ஏ.சி., இயங்காததால் உள்ளே அமர முடியவில்லை என கவுன்சிலர்கள் புகார் தெரிவித்தனர். சரிசெய்யப்படும் எனக்கூறி தலைவர்கூட்டத்தை முடித்தார்.