| ADDED : நவ 21, 2025 04:18 AM
முதுகுளத்துார்: முதுகுளத்துாரில் வட்டார போக்குவரத்து அலுவலகம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டு தற்போது வரை வட்டார போக்குவரத்து அலுவலகம் அமைக்கப்படாமல் அறிவிப்போடு கிடப்பில் போடப்பட்டதால் முதுகுளத்துார் அதனை சுற்றியுள்ள கிராம மக்கள் அவதிப்படுகின்றனர். அமைச்சர் ராஜ கண்ணப்பன் தொகுதியில் இந்த அவல நிலை ஏற்பட்டுள்ளது. முதுகுளத்துார், கமுதி, கடலாடி, சாயல்குடி, வாலிநோக்கம் அதனை சுற்றியுள்ள 200க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து மக்கள் புதிய வாகனம் பதிவு செய்தல், இன்சூரன்ஸ், லைசன்ஸ் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக பரமக்குடி வட்டார போக்குவரத்து அலுவலகம் சென்று வந்தனர். இதனால் நாள் முழுவதும் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு புதிதாக முதுகுளத்துார், கமுதி, கடலாடி பகுதியைச் சேர்ந்த மக்கள் பயன்பெறும் வகையில் முதுகுளத்துாரில் வட்டார போக்குவரத்து அலுவலகம் அமைக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன் பிறகு அமைச்சர் தலைமையில் கலெக்டர் உட்பட அனைத்து துறை அதிகாரிகள் அலுவலகம் கட்டுவதற்காக முதுகுளத்துார் பகுதியில் இடங்களை ஆய்வு செய்தனர். தற்போது வரை வட்டார போக்குவரத்து அலுவலகம் அறிவிப்போடு கிடக்கிறது. இடங்கள் தேர்வு செய்வதற்கு கூட 4 ஆண்டுகளை கடந்துள்ளது. இதனால் வட்டார போக்குவரத்து அலுவலக பணிக்காக முதுகுளத்துார், கடலாடி, கமுதி, சாயல்குடி மக்கள் 40 கி.மீ., சென்று அத்தியாவசிய வேலைக்கு கூட செல்ல முடியாமல் மக்கள் சிரமப்படுகின்றனர். எனவே தொகுதி மக்களின் நலன் கருதி திட்டங்களை அறிவிப்புகளோடு விட்டுவிடாமல் முறையாக அதிகாரிகள் ஆய்வு செய்து உடனடியாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அமைச்சர் ராஜகண்ணப்பன் தொகுதியில் ஆய்வு செய்தும் இதுவரை கட்டப்படாமல் உள்ளது வட்டார போக்குவரத்து அலுவலகம். முதுகுளத்துார் தொகுதி மக்களுக்கு வட்டார போக்குவரத்து அலுவலக கட்டடம் அறிவிப்பு என்பது கானல் நீராகவே உள்ளது என்று மக்கள் கூறுகின்றனர்.