| ADDED : நவ 21, 2025 04:49 AM
முதுகுளத்துார்: முதுகுளத்துார் அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகள் பிரிவு கட்டடத்தின் சுவற்றில் மரங்கள் வளர்ந்து இருப்பதால் கட்டடம் சேதமடையும் அபாயம் உள்ளது. இங்கு உள்நோயாளிகள், வெளி நோயாளிகள், சித்த மருத்துவம், மகப்பேறு, எக்ஸ்ரே உட்பட தனித்தனி பிரிவாக செயல்பட்டு வருகிறது. முதுகுளத்துார் அதனை சுற்றியுள்ள காக்கூர், ஏனாதி, இளஞ்செம்பூர், வெண்ணீர்வாய்க்கால், செல்வநாயகபுரம், கீரனுார், ஆத்திகுளம்,புளியங்குடி, கீழத்துாவல் உட்பட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து தினந்தோறும் 500க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று செல்கின்றனர். சில ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட உள்நோயாளிகள் பிரிவு ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என தனித்தனியாக 60 படுக்கை வசதியுடன் உள்ளது. இந்த கட்டடத்தில் மேல்புறத்தில் சுவரில் மரம் வளர்ந்துள்ளதால் சுவர் சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்து விரிசல் ஏற்பட்டு சேதமடையும் அபாயம் உள்ளது. அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன்பு மரத்தை அகற்றி மராமத்து பணி செய்ய வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர்.