டாக்டர்கள் பற்றாக்குறையால் கிராமப்புற நோயாளிகள் தவிப்பு
ராமநாதபுரம்: -கிராமப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் பல ஆண்டுகளாக டாக்டர்கள் பற்றாக்குறையால் கிராமப்புற நோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல் தவிக்கின்றனர்நாட்டில் பொது சுகாதாரத்துறையில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது. கிராமப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமாக டாக்டர்கள், செவிலியர், மருத்துவ பணியாளர் காலி பணியிடங்கள் இருப்பதால் பல ஆரம்ப சுகாதார நிலையங்களில் டாக்டர்கள் இல்லாமல் செவிலியர்கள் மட்டுமே நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கின்றனர்.தொடர் கண்காணிப்பில் உள்ள கர்ப்பிணிகள், ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் பாதிப்புள்ள நோயாளிகள் டாக்டர்கள் இல்லாததால் மிகவும் சிரமப்பட்டு நகர்புறங்களில் உள்ள அரசு மருத்துவமனைக்கு வரும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமநாதபுரம் சுகாதார மாவட்டம், பரமக்குடி சுகாதார மாவட்டம் என உள்ளது. இதில் பரமக்குடியில் 30 ஆரம்ப சுகாதார நிலையங்களும், ராமநாதபுரத்தில் 25 ஆரம்ப சுகாதார நிலையங்களும் உள்ளன. ராமநாதபுரத்தில் 93 டாக்டர்கள் பணியில் இருக்க வேண்டிய நிலையில் 54 பேர் மட்டுமே உள்ளனர்.இதிலும் 10 டாக்டர்கள் மேல் படிப்புக்காக செல்ல இருக்கின்றனர். இதனால் 44 டாக்டர்கள் மட்டுமே பணியில் இருப்பார்கள். 49 டாக்டர்கள் காலி பணியிடங்களாக இருக்கும். திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம், திருப்புல்லாணி ஆரம்ப சுகாதாரநிலையங்களில் டாக்டர்களே இல்லாத நிலை உள்ளது. இதில் விடுமுறை, ஷிப்ட் டூட்டி வருவதால் டாக்டர்கள் இல்லாத நிலை தான் உள்ளது.பரமக்குடி சுகாதார மாவட்டத்தில் 97 டாக்டர்கள் பணியில் இருக்க வேண்டும். 47 பேர் மட்டுமே பணியில் உள்ளனர். 50 டாக்டர்கள் காலி பணியிடங்கள் உள்ளன. இதே நிலை தான் தமிழகம் முழுவதும் உள்ளது. பல ஆண்டுகளாக பொது சுகாதாரத்துறையில் டாக்டர் காலி பணியிடங்களை நிரப்பாததால் கிராமப்புற நோயாளிகள் தவிக்கின்றனர். கிராமப் புறத்தில் சுகாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது..