பள்ளிக்கல்வித்துறை வினாடி வினா போட்டி அரசு உதவி பெறும் பள்ளிகள் புறக்கணிப்பு
ராமநாதபுரம்: -தமிழகத்தில் வாசிப்புத் திறனை மேம்படுத்துவதற்காக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நடத்தப்படும் வினாடி வினா போட்டிகளில் அரசு உதவி பெறும் பள்ளிகள் புறக்கணிக்கப்படுகிறது.தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் அரசுப்பள்ளிகளில் மாணவர்களின் வாசிப்பு திறனை மேம்படுத்துவதற்காக 15 நாட்களுக்கு ஒரு முறை 1 முதல் 5 ம் வகுப்பு மாணவர்களுக்கு ஊஞ்சல் என்ற இதழும், 6 முதல் 8 ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு தேன் சிட்டு இதழ் வழங்கப்படுகிறது. ஒரு வகுப்புக்கு ஒரு இதழ் வீதம் பள்ளிக்கல்வித்துறை வழங்குகிறது. மாணவர்கள் அதிக எண்ணிக்கை இருந்தால் கூடுதல் இதழ்கள் வழங்கப்படுகின்றன. இதில் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு இந்த இதழ் வழங்கப்படாமல் புறக்கணிக்கப்படுகிறது.இந்த இதழ்களையும், தினசரி நாளிதழ்கள், பொது அறிவு, நடப்பு நிகழ்வுகள் என அனைத்திலிருந்தும் மாணவர்களுக்கு வினாடி வினா போட்டிகள் நடத்தப்படுகிறது. ஒரு பள்ளியில் இருந்து ஒரு குழுவிற்கு 4 பேர் வீதம் இரு குழுக்கள் பங்கேற்கலாம்.தேன் சிட்டு, தினசரி நாளிதழ்கள் வினாடி வினா பிரிவில் ஒரு குழுவும், பொது அறிவு, நடப்பு நிகழ்வுகள் பிரிவில் மற்றொரு குழு என இரு குழுக்கள் பங்கேற்கலாம். ஒரு குழுவில் 4 மாணவர்கள் இடம் பெறுவார்கள். இந்த போட்டி அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே நடத்தப்படுகிறது.அரசு உதவி பெறும் பள்ளிகள் புறக்கணிக்கப்படுகிறது. அனைத்து மாணவர்களுக்கும் வாசிப்பு திறனை மேம்படுத்தவும், வினாடி வினா போட்டிகளில் பங்கேற்க செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் எதிர்பார்க்கின்றனர்.