உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பாதாளசாக்கடை பிரச்னை; வரிவசூலில் முறைகேடு; ராமநாதபுரம் நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் புகார்

பாதாளசாக்கடை பிரச்னை; வரிவசூலில் முறைகேடு; ராமநாதபுரம் நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் புகார்

ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் பாதாளசாக்கடை பிரச்னையால் மக்கள் தினமும் சிரமப்படுகின்றனர். நிரந்தர தீர்வு காணவில்லை. வீடு, கடைகளுக்கு வரிவிதிப்பிற்கு சில அலுவலர்கள் லஞ்சம் கேட்பதாக கவுன்சிலர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.ராமநாதபுரம் நகராட்சி அலுவலக கூட்ட அரங்கத்தில் மாதந்திர கவுன்சில் கூட்டம் நடந்தது. தலைவர் கார்மேகம் தலைமை வகித்தார். கமிஷனர் அஜிதா பர்வின் முன்னிலை வகித்தார். முன்னதாக மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்க்கு அனைவரும் 5 நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்தினர்.

கருணாநிதி பெயர் வைக்க எதிர்ப்பு

முதல் தீர்மானமாக ராமநாதபுரம் புது பஸ் ஸ்டாண்டிற்கு கருணாநிதி பெயர் வைக்க முன்மொழிந்தனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ., கவுன்சிலர் குமார் புது பஸ் ஸ்டாண்டிற்கு மன்னர் பாஸ்கரசேதுபதி, வீரமங்கை வேலுநாச்சியர், மன்னர்கள் சின்ன, பெரிய மருதுபாண்டியர் இதில் ஏதேனும் ஒருவரின் பெயரை வைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். அதேசமயம் அ.தி.மு.க., அ.ம.மு.க., கவுன்சிலர்கள் கருத்து கூறாமல் அமைதியாக இருந்தனர். தி.மு.க., கவுன்சிலர்கள் ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் நடந்த விவாதம்:குமார் (பா.ஜ.,): ராமநாதபுரத்தில் கடந்த 4 ஆண்டுகளாக பாதாளசாக்கடை பிரச்னை உள்ளது. ரோடு, தெருவில் ஆறாக கழிவுநீர் ஓடுகிறது. மாதந்தோறும் பராமரிப்பு பெயரில் ரூ.பல லட்சம் செலவு செய்கின்றனர். நிரந்தர தீர்வு இல்லை. பா.ஜ.,விடம் ஒப்படைத்தால் ஒரிரு மாதங்களில் பாதாளசாக்கடை திட்டத்தை சரிசெய்துவிடுவோம் என சவால் விடுத்தார். தலைவர்: பா.ஜ.,விடம் வழங்கினால் சுத்தமாக அழித்துவிடுவீர்கள். பாதாளசாக்கடை, குடிநீர் குழாய் பதிக்கும் பணியின் போது உடைப்புஏற்படுவதால் கழிவுநீர் தேங்குகிறது. அதை செய்ய முன்கூட்டி செலவு செய்யப்படுகிறது. குழாய் பதிக்கும் பணிகள் முடிந்தவுடன் கழிவுநீர் தேங்கும் பிரச்னை இருக்காது. இந்திராமேரி (அ.தி.மு.க.,): சிங்காரதோப்பு பகுதியில் கழிவுநீர் குடிநீரில் கலந்துள்ளதால் மக்களுக்கு பதில் சொல்ல முடியவில்லை. தலைவர்: பம்பிங் ஸ்டேஷன் குழாய் உடைப்பால் பிரச்னை உள்ளது. அதை சரிசெய்யும் பணி முடிந்துவிட்டதால் இன்று (நேற்று) முதல் பம்பிங் செய்யப்படுகிறது. ஒரிருநாட்களில் சரியாகிவிடும். கமலக்கண்ணன் (தி.மு.க.,): 12வது வார்டில் புதிதாக வீடு, கடைகள் கட்டுவதற்கு வரிவிதிக்கும்போது நகராட்சி கட்டணத்தை விட கூடுதலாக ரூ.8000 முதல் 20,000 வரை கேட்கின்றனர். இதுதொடர்பாக நிறைய புகார் வருகிறது. குழாய் பதிக்கும் போது கவுன்சிலர்களிடம் தெரிவிப்பது கிடையாது, ஆனால் மக்கள் எங்களிடம் தான் புகார் தெரிவிக்கின்றனர். இப்படி நிர்வாகம் நடந்தால் அடுத்தமுறை எப்படி தி.மு.க.,விற்கு ஓட்டுகேட்பது என தெரியவில்லை.கமிஷனர்: அரசு விதிகளுக்குட்பட்டு கடை, வீடுகளுக்கு புதிய வரிவிதிக்கப்படுகிறது. கூடுதலாக வாங்குவது தொடர்பாக எழுத்துபூர்வமாக புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.நாகராஜன் (தி.மு.க.,) : பாதாளசாக்கடை பிரச்னையால் மேஹோல் நிரம்பி வீடுகளில் கழிவுநீர் தேங்குகிறது. அதை சுத்தம் செய்வதற்கு ரூ.500, 1000 வசூலிக்கின்றனர். நகராட்சி தரப்பு பிழைக்கு மக்கள் ஏன் பணம் செலுத்த வேண்டும். இதனால் அரசிற்கு அவப்பெயர் ஏற்படுகிறது. அம்மாதிரியான இடங்களில் கட்டணம் வசூலிக்க கூடாது.கமிஷனர்: பாதாளசாக்கடை அடைப்பு வீடுகளில் இருந்தால் அதை சரிசெய்ய கட்டணமாக ரூ.500 கட்ட வேண்டும். நீங்கள் சொல்வது போல ரோட்டில் பிரச்னை ஏன்றால் பணம் செலுத்த தேவையில்லை.தலைவர்: வார்டுகளில் குடிநீர், பாதாளசாக்கடை குழாய்கள் சீரமைக்கும் பணி நடந்தால் கண்டிப்பாக அலுவலர்கள் வார்டு கவுன்சிலர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை