| ADDED : நவ 26, 2025 01:13 AM
ராமேஸ்வரம்: பார்வையற்றோருக்கு சிலம்ப பயிற்சி அளித்ததை பாராட்டி பாம்பன் மீனவ இளைஞருக்கு சாதனையாளர் விருதை கவர்னர் ரவி வழங்கினார். ராமேஸ்வரம் அருகே பாம்பன் பகுதியை சேர்ந்தவர் அந்தோணிஅதீஸ் 30. பட்டதாரியான இவர் தஞ்சாவூர் தமிழ் பல்கலையில் சிலம்பம் பட்டைய பயிற்சி கற்றுள்ளார். படிப்புக்கு பின் பாம்பனில் உள்ள மாணவர்கள், இளைஞர்கள் 60 பேருக்கு சிலம்பம் கற்றுக் கொடுக்கிறார். பார்வையற்றோர், காதுகேளாதோருக்கு பயிற்சி கொடுக்க விரும்பிய அந்தோணி அதீஸ், 3 ஆண்டுகளாக மதுரையில் பார்வையற்றோர் மற்றும் காது கேளாதோர், வாய் பேச முடியாதோர் பள்ளியில் படிக்கும் 20க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு மாதம் இருமுறை இலவசமாக சிலம்பம் பயிற்சி அளிக்கிறார். இதையறிந்த கவர்னர் ரவி, நேற்று முன்தினம் கவர்னர் மாளிகை வளாகத்தில் நடந்த உலக மீனவர் தின விழாவில் அந்தோணி அதீஸை வரவழைத்து சாதனையாளர் விருது வழங்கி பாராட்டினார். அந்தோணிஅதீஸ் கூறியதாவது: உடல் ஆரோக்கியம், உடல் வலிமையை மேம்படுத்தக் கூடியது சிலம்ப பயிற்சி. இதனை உடல் குறைபாடு உள்ளவர்களும் கற்றுக் கொள்ள வேண்டும் என விரும்பி பார்வையற்றோர், காதுகேளாதோர், வாய்பேச முடியாதவர்களுக்கு கற்றுக் கொடுக்கிறேன். கவர்னர் விருது வழங்கியது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.