| ADDED : ஜூன் 21, 2024 04:16 AM
ராமநாதபுரம் நகர், புறநகர் பகுதிகளில் ஏராளமான ஊருணிகள் உள்ளன. இவற்றில் ஒருசிலவற்றை தவிர்த்து பெரும்பாலான ஊருணிகள் பராமரிக்கப்படாமல் அதன் அடையாளத்தை இழந்துள்ளன.ராமநாதபுரம் நகராட்சிக்கு உட்பட்ட வெளிப்பட்டணம்- ஓம்சக்தி நகருக்கு செல்லும் வழியில் உள்ள சாயக்கார ஊருணி மற்றும் வண்டிக்கார தெரு வண்ணார் ஊருணி, வழிவிடுமுருகன் கோயில்- கேணிக்கரை ரோட்டில் கிடாவெட்டி ஊருணி, சூரன்கோட்டை ரோட்டில் நீலகண்டி ஊருணி ஆகியவை குடியிருப்புகளுக்கு மத்தியில் அமைந்துள்ளது.இந்த ஊருணிகளில் நீர்வரத்து கால்வாய்கள் பராமரிக்கப்படாமல் உள்ளன.தற்போது ஊருணியில் குப்பை, கழிவுநீர் கலந்து தண்ணீர் மாசடைந்துள்ளது. கரைப்பகுதியில் சீமைக்கருவேலம் மரங்கள் வளர்ந்துள்ளனஇதனால் துர்நாற்றம், கொசுத்தொல்லையால் மக்கள் தினமும் சிரமப்படுகின்றனர். வயிற்றுப் போக்கு, காய்ச்சல் போன்ற நோய் தொற்று பரவ வாய்ப்பு உள்ளதாக மக்கள் புகார் தெரிவித்தனர்.எனவே நகரில் நிலத்தடி நீர்மட்டத்திற்கு ஆதாரமாக உள்ள ஊருணிகளை ஆக்கிரமித்துள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றி நீர்பிடிப்பு பகுதிகளை துார்வாரி கரையை பலப்படுத்த வேண்டும். ஊருணிகளுக்கான நீர்வரத்து வாய்க்கால்களை செப்பனிட நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.