| ADDED : நவ 20, 2025 05:27 AM
ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே டி-பிளாக் ரோட்டில் வாரச்சந்தை நடைபெறுவதால் அப்பகுதியில் புதன் கிழமை தோறும் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் சிரமப்படு கின்றனர். ராமநாதபுரம் அருகே பட்டணம்காத்தான் ஊராட்சி டி-பிளாக் அம்மா பூங்கா அருகே புதன்தோறும் வாரச்சந்தை நடக்கிறது. இங்கு உள்ளூர் மட்டுமின்றி சுற்றியுள்ள கிராம மக்கள், வெளியூர் வியாபாரிகள் ஏராளமானவர்கள் சரக்கு வாகனங்கள், கார், டூவீலரில் வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையால் வாரச்சந்தை நடைபெறும் இடத்தில் தண்ணீர் குளம் போல பல நாட்களாக தேங்கி குப்பை கொட்டுவதால் கழிவுநீராகி நோய்பரப்பு இடமாக மாறியுள்ளது. இதனால் சில வாரங்களாக கடை வைக்க போதுமான இடமின்றி வியாபாரிகள் டி-பிளாக் ரோட்டில் வியாபாரம் செய்கின்றனர். பொருட்கள் வாங்க வரும் மக்கள் ரோட்டில் வாகனங்களை நிறுத்தினர். ஒவ்வொரு புதன்கிழமை தோறும் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் வாடிக்கையாகியுள்ளது. வாரந்தோறும் வியாபாரிகள் இடம் கடைக்கு ரூ.50 முதல் ரூ.100 எனகட்டணம் வசூல் செய்யும் பட்டணம்காத்தான் ஊராட்சி நிர்வாகம், மழைநீரை அகற்றி அவ்விடத்தில் மண் கொட்டி சமன் செய்ய வேண்டும் என வியாபாரிகள், மக்கள் வலியுறுத்தினர்.