மேலமுந்தலில் சுனாமி வீடுகள் சேதம்: விபத்து அச்சத்தில் மக்கள் மராமத்து பணிகள் செய்ய கோரிக்கை
சாயல்குடி : சாயல்குடி அருகே மாரியூர் ஊராட்சிக்குட்பட்ட மேலமுந்தலில் சுனாமி வீடுகள் சேதமடைந்த நிலையில் உள்ளதால் அவற்றில் குடியிருப்போர் அச்சத்தில் உள்ளனர்.மன்னார் வளைகுடா கடற்கரையையொட்டி உள்ள கிராம பகுதிகளில் மத்திய, மாநில அரசுகளின் சுனாமி திட்ட நிதியின் அடிப்படையில் வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த 2009 மற்றும் 2010ம் ஆண்டில் மேலமுந்தலில் 32 வீடுகள் கட்டப்பட்டன. அதன் பின்னர் 2012ம் ஆண்டில் கூடுதலாக 29 வீடுகள் கட்டப்பட்டுள்ளது. 61 பேருக்கு ஒதுக்கிய வீடுகளிலும் மக்கள் வசிக்கின்றனர். பெரும்பாலான வீடுகளின் கூரை பூச்சுகள் சேதமடைந்தும், கட்டடங்களில் விரிசல்கள் ஏற்பட்டும் உள்ளது.அப்பகுதி மக்கள் கூறியதாவது: சமத்துவபுரத்திற்கு வீடுகள் கட்டிக் கொடுத்து அதற்கு உரிய முறையில் மராமத்து பணிகளுக்கான அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. அதனைப் போன்று சுனாமி வீடுகளுக்கும் அரசு திட்ட மதிப்பீடுகளை ஒதுக்கீடு செய்து மராமத்து பணிகளை செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். மாரியூர் ஊராட்சி சார்பில் அமைக்கப்பட்ட சிமெண்ட் ரோடு சேதமடைந்து உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகத்தினர் இப்பகுதி மக்களின் நலன் கருதி மராமத்து பணிகள் செய்வதற்கும், ரோடு சீரமைக்க உரிய நிதிகளை ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.