கோட்டை கரை ஆற்றில் கருவேல மரங்களை அகற்ற வலியுறுத்தல்
ஆர்.எஸ்.மங்கலம்:கோட்டைக்கரை ஆற்றில் வளர்ந்து வரும் சீமைக்கருவேல மரங்களை அகற்றி தூர்வார விவசாயிகள் வலியுறுத்தினர்.சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே சருகணி ஆறு முடிவிலிருந்து துவங்கும் கோட்டைக்கரையாறு சாத்தனுார், ஆனந்துார், ஆய்ங்குடி, சனவேலி, அழியாதான்மொழி, சேந்தனேந்தல் ஓடை வழியாகச் சென்று கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் கடலில் சேர்கிறது.மழைக் காலங்களில் ஏற்படும் வெள்ளப்பெருக்கு இந்த ஆற்றின் வழியே வெளியேறி கடலில் கலக்கிறது. இதனால் பெரும்பாலான விவசாய நிலங்களும், குடியிருப்பு பகுதிகளும் பெரும் பாதிப்பின்றி தவிர்க்கப்படுகின்றன. முக்கியத்துவம் வாய்ந்த கோட்டைக்கரை ஆறு, கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக பராமரிப்பின்றி ஆற்றில் சீமைக்கருவேல மரங்கள் சூழ்ந்து புதர் மண்டி உள்ளது.இதனால் மழைக்காலங்களில் உபரி நீர் விரைவாக வெளியேறுவதில் சிக்கல் ஏற்பட்டு வருகிறது. மேலும் சீமைக்கருவேல மரங்கள் அடர்ந்துள்ளதால் மணல் திருட்டில் ஈடுபடும் சமூக விரோத கும்பல்களுக்கு சாதகமாகவும் அமைந்துள்ளது.எனவே ஆற்றில் உள்ள சீமைக்கருவேல மரம் புதர்களை அகற்றி ஆற்றை துார்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.