பரமக்குடியில் 360 கடைகளுடன் ரூ.13.50 கோடியில் வாரச்சந்தை
பரமக்குடி : பரமக்குடி நகராட்சி வாரச்சந்தை ரூ.13 கோடியே 50 லட்சம் செலவில் 360 கடைகள் கூரை வசதியுடன் அமைக்கப்படுகிறது.பரமக்குடியில் ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமைகளில் சந்தை கூடுகிறது. காய்கறிகள், மளிகை, பழங்கள் கருவாடு விற்பனை, கால் நடைகள் சந்தை நடக்கிறது. அதிகாலை துவங்கி சந்தை இரவு 10:00 மணி வரை நடக்கிறது. இந்நிலையில் சந்தையில்கூரை வசதியின்றியும், தரைதளங்கள் மணலாக காணப்பட்டது. இதனால் வெயிலால் ஒருபுறம் அவதி அடைந்த சூழலில், மழைக்கு மத்தியில் சேரும் சகதியுமாக சந்தை மாறி வந்தது.இது குறித்து பலமுறை தினமலர் நாளிதழ் சுட்டிக்காட்டி வந்தது. 2023---24ம் ஆண்டுரூ.13 கோடியே 50 லட்சத்தில் வாரச்சந்தை கூரையுடன் கட்டும் பணிகள் நடக்கிறது.இங்கு 240 காய்கறி கடைகள், 120 கருவாட்டு கடைகள் என 360 கடைகள் கட்டப்படுகிறது.மேலும் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளுக்கும் தனியாக சந்தை கூட உள்ளது.இங்கு வரும் வியாபாரிகள், மக்களுக்கு தேவையான குடிநீர் வசதிகளும், கழிப்பறை வசதிகளும் மேம்படுத்தப்பட்டு வருகிறது, என நகராட்சித் தலைவர் சேது கருணாநிதி தெரிவித்தார். துணைத் தலைவர் குணா, கமிஷனர் முத்துச்சாமி உடனடிருந்தனர்.