மெத்தை தொழிற்சாலையில் தீ விபத்து லட்சக்கணக்கிலான பொருட்கள் நாசம்
மெத்தை தொழிற்சாலையில் தீ விபத்து லட்சக்கணக்கிலான பொருட்கள் நாசம் ராணிப்பேட்டை, ராணிப்பேட்டை அருகே, மெத்தை தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில், லட்சக்கணக்கான மதிப்புள்ள மூலப்பொருட்கள் எரிந்து நாசமானது. ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை அடுத்த சித்தாத்துார் பகுதியில் இயங்கி வரும், பஞ்சு மெத்தை தயாரிக்கும் தொழிற்சாலையில், நேற்று முன்தினம் மாலை மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென பரவி அனைத்து பகுதிகளிலும் கொழுந்து விட்டு எரிந்தது. தீயை கட்டுப்படுத்த சிப்காட் தீயணைப்பு துறை வீரர்கள் முயன்றனர். அவர்களால் முடியாததால், சோளிங்கர், வாலாஜாபேட்டை, மேல்விஷாரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து, 30க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று, நீண்ட நேரம் போராடி தீயை கட்டுப்படுத்தி அணைத்தனர். வாலாஜாபேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.