தி.கோடு அரசு மருத்துவமனையில்புதிய கட்டட பணி: கலெக்டர் ஆய்வு
தி.கோடு அரசு மருத்துவமனையில்புதிய கட்டட பணி: கலெக்டர் ஆய்வுதிருச்செங்கோடு:திருச்செங்கோட்டில், நாமக்கல் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு இணையாக, 23 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு வரும், தரைத்தளத்துடன் கூடிய, ஐந்தடுக்கு மாடி கட்டட பணிகளை, கலெக்டர் உமா, திருச்செங்கோடு எம்.எல்.ஏ., ஈஸ்வரன் ஆகியோர் ஆய்வு செய்தனர். திருச்செங்கோடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி பொதுமக்கள் பயன்பெறும் வகையில், நாமக்கல் மாவட்ட தலைமை மருத்துவமனை, திருச்செங்கோட்டில் வேண்டுமென பொதுமக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர்.இந்நிலையில், நாமக்கல் நகரில் மருத்துவ கல்லுாரி மருத்துவமனை அமைந்துவிட்டதால், மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு இணையாக அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய கட்டடம் அமைக்கப்படும் என, தமிழக அரசு அறிவித்தது. அதன்படி, திருச்செங்கோடு அரசு மருத்துவமனை வளாகத்தில், 11,000 சதுர மீட்டர் பரப்பளவில், தரைத்தளத்துடன் கூடிய, ஐந்தடுக்கு கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. 90 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், நேற்று கட்டட பணிகளை ஆய்வு மேற்கொண்டனர். விரைவில் திறப்பு விழா நடக்க உள்ளது.