உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஆமணக்கு சாகுபடி: விவசாயிகளுக்கு அறிவுரை

ஆமணக்கு சாகுபடி: விவசாயிகளுக்கு அறிவுரை

மேட்டூர் : ஆமணக்கு செடிகள் வறட்சியை தாங்கி வளரும் தன்மை கொண்டவை. சாகுபடி செய்த, 4 மாதங்களில் இருந்து, 6 மாதங்களில் அறுவடைக்கு வரும். இது புதர் வகை செடி. தரிசு நிலத்திலும் நன்றாக வளரும். பச்சை, வீரிய ஓட்டு ரகம், ஏத்தாப்பூர் - 1 ரகத்தை ஆண்டு முழுதும் சாகுபடி செய்யலாம். ஒரு ஏக்கருக்கு, 3 கிலோ விதை தேவைப்படும். ஒரு கிலோ விதைக்கு, 4 கிராம் டிரைக்கோடெர்மா விரிடி கலந்து வைக்கவும்.மேலும் அசேஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா தலா, 200 கிராம் கலந்து ஆரிய அரிசி கஞ்சி, 200 மில்லி கிராமில் கலந்து விதை நேர்த்தி செய்யலாம். ஏர் கலப்பையாக இருந்தால், 4 உழவுகள், டிராக்டராக இருந்தால், 5 உழவுகள் செய்ய வேண்டும். மண்ணில் கழிவு, கட்டி, பிளாஸ்டிக், கல் இருந்தால் அகற்ற வேண்டும். ஒரு ஏக்கருக்கு மட்கிய தொழு உரம், 4 டன் போட வேண்டும். ஒரு ஏக்கருக்கு தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து தலா, 45 கிலோ போட வேண்டும். இறவை பயிருக்கு தலா, 30 கிலோ போட்டால் போதும். செடிகளை குறிப்பிட்ட இடைவெளியில் சாகுபடி செய்ய வேண்டும். விதை நடவு செய்த, 15 நாட்களுக்குள் நுண்ணுரம், எண்ணெய் வித்து நுண்ணுரம், 20 கிலோ மணலுடன் இட வேண்டும்.மேலும், 10 நாட்களுக்கு ஒருமுறை நீர் பாசனம் செய்ய வேண்டும். குருத்து புழுக்களால் பாதித்த காய்களை பறித்து அழிக்க வேண்டும். அதை கட்டுப்படுத்த பிவேரியா பேசியான் தண்ணீர், 10 லிட்டருக்கு, 100 மில்லி கலந்து, 15 நாட்கள் இடைவெளியில் தெளிக்க வேண்டும்.ஆமணக்கு சாகுபடி குறைந்த நாளில் மகசூல் கொடுக்க கூடியது. சாகுபடி செலவு குறைவு, பூச்சி தாக்குதல் அதிகம் இருக்காது. இவற்றை தனி பயிராகவும், ஊடு பயிராகவும் சாகுபடி செய்யலாம். ஆமணக்கின் தாயகமாக எத்தியோப்பியா இருந்தாலும் கூட, உலகில் பிற நாடுகளை விட இந்தியாவில்தான் ஆமணக்கு அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இத்தகவலை, மேச்சேரி வட்டார வேளாண் தொழில்நுட்ப அலுவலர் செல்வகுமார் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ