| ADDED : ஜூலை 01, 2024 03:41 AM
சேலம்: சேலத்தில் நுகர்வோர் உரிமைகள் இயக்கம், பாரதி உரிமைகள் அறக்கட்டளை சார்பில் கல்வி ஊக்கத்தொகை வழங்கல்; உண்டி கொடுப்போம், 3ம் ஆண்டு தொடக்கம்; சமூக சேவகர்களை கவுரவித்தல் ஆகிய முப்பெரும் விழா நேற்று நடந்தது. அறக்கட்டளை நிறுவனர் பூபதி தலைமை வகித்தார்.அதில் மத்திய தொல்லியல் கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா பேசியதாவது: கடமையை செய்தால் முன்னேற்றம் தானாகவே வரும். ஊர்கூடி தேர் இழுப்பது போல, அனைவரும் ஒன்றிணைந்து பொதுச்சேவையில் ஈடுபட வேண்டும். தொல்லியல் என்பது மனிதன் விட்டுச்சென்ற வரலாற்றை ஆராய்வது. மூத்தக்குடி தமிழ், தமிழர்கள் தான் என்பதற்கான ஆதாரத்தை கண்டுபிடித்து அதற்கு கீழடி பதில் சொல்லியிருக்கிறது. இரும்பை கண்டுபிடித்தது தமிழர்கள் தான். பெற்றோர் அறிவுரையை கேட்டு படித்து மாணவர்கள், சிறந்த தலைமுறையை உருவாக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.தொடர்ந்து அனைவருக்கும் மஞ்சப்பை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அரசு பள்ளியில் படித்து உயர்கல்வி செல்லும் மாணவ, மாணவியர், 40 பேருக்கு தலா, 1,000 ரூபாய் கல்வி ஊக்கத்தொகை வழங்கப்பட்டன. மேலும், தமிழகத்தில் சேவை பெறும் உரிமை சட்டத்தை அமல்படுத்தல் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.