சேலம்: சேலம், செவ்வாய்ப்பேட்டை பிரசன்ன வெங்கடாஜலபதி கோவிலில், கிருஷ்ணன் சன்னதி கும்பாபிஷேகம் நடந்தது. சேலம் செவ்வாய்ப்பேட்டை பிரசன்ன வெங்கடாஜலபதி கோவில் வளாகத்தில், பட்டாபிநாயுடு, கிருஷ்ணவேணி தம்பதியினர் குடும்பத்தின் சார்பில், கிருஷ்ணன் சன்னதி அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த சன்னதி கும்பாபிஷேகம் நேற்று காலையில் மன்னார்குடி பிரசன்ன வேங்கடேஸ தீட்சிதர் தலைமையில் நடந்தது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் அனுக்ஞை, புண்யாகவசனம், மிருத்ஸங்கிரஹனம் விஷ்வக் ஸேனாராதனம், வாஸ்து சாந்தி, ரக்ஷாபந்தனம், யாக சாலை பிரவேசனம், முதற்கால யாக பூஜைகள் நடந்தது.
மாலையில் திருமஞ்சனம், நயனோன்மீலனம், பிம்பரஷாபந்தனம், பிம்ப பிரதிஷ்டை, இரண்டாம் கால யாக சாலை பூஜைகள், பூர்ணாஹூதி, சயனாதிவஸம், சாற்று முறை ஆகியன நடந்தது. நேற்று காலையில் விஸ்வரூப தரிசனம், மூன்றாம் கால யாகசாலை ஹோமங்கள், தத்வத்யாஸ ப்ரணப்ரதிஷ்டா ஹோமங்கள், பூர்ணாஹூதி, யாத்ரா தானம், க்ருஹப்ரீதி, கும்ப உத்தாபனத்தை தொடர்ந்து மஹா கும்பாபிஷேகம் நடந்தது. இந்த கும்பாபிஷேகத்தில், வரதராஜிலு, கவிதா, ரமேஷ்பாபு, பிருந்தா உட்பட நூற்றுக் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர். இந்த கும்பாபிஷேகத்துக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்தனர்.