உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மேட்டூர் அணைக்கு வரும் 1.70 லட்சம் கனஅடி நீரும் வெளியேற்றம் இடைப்பாடி சாலை மூழ்கியதால் போக்குவரத்துக்கு தடை

மேட்டூர் அணைக்கு வரும் 1.70 லட்சம் கனஅடி நீரும் வெளியேற்றம் இடைப்பாடி சாலை மூழ்கியதால் போக்குவரத்துக்கு தடை

மேட்டூர்,மேட்டூர் அணை நிரம்பியதால், அங்கு வரும், 1.70 லட்சம் கனஅடி உபரி நீரும் அப்படியே வெளியேற்றப்படுகிறது. இதனால் மேட்டூர் - இடைப்பாடி சாலை மூழ்கி போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம், 120 அடி. கொள்ளளவு, 93.47 டி.எம்.சி., கடந்த, 30ல் அணை நிரம்பியது. நேற்று மதியம், 4:00 மணிக்கு, அணைக்கு வினாடிக்கு, 1.70 லட்சம் கன அடி நீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து உபரிநீர், 16 கண் மதகில், 1.48 லட்சம் கன அடி திறக்கப்பட்டுள்ளது. தவிர அணை மின் நிலையங்கள் வழியே, 21,500 கன அடி, கால்வாயில், 500 கன அடி என, மொத்தம், 1.70 லட்சம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் காவிரி கரையோர பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.இதனால் மேட்டூரில் கரையோர மக்களின் பாதுகாப்பு முன்னேற்பாடு, பேரிடர் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்படும் உபகரணங்கள், தீயணைப்புத்துறையினர் தயார் நிலை உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து, சேலம் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சங்கர், கலெக்டர் பிருந்தாதேவி ஆய்வு செய்தனர்.குறிப்பாக அணையை சுற்றியுள்ள பகுதிகளான தங்கமாபுரிபட்டணம், பெரியார் நகர், வ.உ.சி., நகர் பகுதிகளில், வெள்ள பாதிப்பு உள்ள நிலையில், முகாம்கள் தயாராக உள்ளது. அங்கு மக்களை முன்னெச்சரிக்கையாக அனுப்பும்படி, கலெக்டர் அறிவுறுத்தினார். மேலும் அணை பாதுகாப்பு குறித்து, நீர்வளத்துறை அதிகாரிகளிடம் ஆலோசித்தார்.மேட்டூர் அணை உபரிநீர் போக்கி வழியே தண்ணீர் பெருக்கெடுத்து செல்வதால் அனல் மின் நிலையம், சங்கிலி முனியப்பன் கோவில் வழியே இடைப்பாடி செல்லும் சாலை மூழ்கியது. இதனால் கான்கிரீட் தடுப்புகளை வைத்து போக்குவரத்துக்கு போலீசார் தடை விதித்துள்ளனர். சங்கிலி முனியப்பன் கோவில், கோல்நாயக்கன்பட்டி, பொறையூர், செக்கானுார் கிராமங்களுக்கு போக்குவரத்து தடைபட்டதால் மக்கள் அவதிக்குள்ளாகினர். தவிர அனல் மின் நிலையத்தில் இருந்து சாம்பல் எடுத்து வரும் லாரி போக்குவரத்தும் தடைபட்டது.பள்ளி வாகனங்களும் இயக்க முடியாததால், பெற்றோர், குழந்தைகளை காவிரி கிராஸ் பாலம் வழியே, இருசக்கர வாகனங்களில் அழைத்துச்சென்றனர். மேட்டூர் - இடைப்பாடி செல்லும் அரசு பஸ்கள் இயக்கம் நிறுத்தப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை