உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ரூ.29 கோடியில் மாமாங்கத்தில் மேம்பால பணிகள் தொடக்கம்

ரூ.29 கோடியில் மாமாங்கத்தில் மேம்பால பணிகள் தொடக்கம்

சேலம், மாமாங்கத்தில், ரூ.29 கோடி மதிப்பில் மேம்பால பணிகள் தொடங்கியுள்ளன.சேலம் மாமாங்கம் பகுதியில், பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இதன் வழியாக புதிய பஸ் ஸ்டாண்ட், கொண்டலாம்பட்டி, ஆத்துார், சென்னை, ஓமலுார், மேட்டூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, பெங்களூருக்கு ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. நெடுஞ்சாலையின் இருபுறங்களிலும் உயர்ரக ஹோட்டல்கள், வணிக வளாகங்கள், கார்களின் விற்பனையகம் என வணிகம் செய்யக்கூடிய முக்கிய இடமாக இருக்கிறது. இதனிடையே ரெட்டிப்பட்டியில் இருந்து ஜங்ஷன், தாரமங்கலம், இரும்பாலை உள்ளிட்ட பகுதிகளுக்கு பள்ளி, கல்லுாரி செல்லும் மாணவ, மாணவிகள், வேலைக்கு செல்வோர் என அனைத்து தரப்பினரும் வந்து செல்கின்றனர். இவர்களுக்கு இணைப்பு சாலையாக தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இதனால் எப்போதும் போக்குவரத்து நெரிசலாக காணப்படும். இது தவிர சில நேரங்களில் விபத்து ஏற்பகிறது. எனவே, இப்பகுதியில் மேம்பாலம் கட்ட வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.இதையேற்று தற்போது பணிகள் நடந்து வருகிறது. இதற்காக வெண்ணங்குடி முனியப்பன் கோவில் அருகே இருந்து, ரேடிசன் ஹோட்டல் வரை, நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லாத வகையில் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது. இதனால் வாகனங்கள் சர்வீஸ் சாலையில் செல்கின்றன. இந்த வழியாக அதிகமாக கனரக வாகனங்கள் செல்வதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.இதுகுறித்து, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'மாமாங்கம் பகுதியில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில், 29 கோடி ரூபாய் மதிப்பில் மேம்பாலம் பணிகள் தொடங்கி உள்ளன. இந்த பாலம் வெண்ணங்குடி முனியப்பன் கோவில் அருகே தொடங்கி, ரேடிசன் ஹோட்டல் வரை, 700 மீட்டர் நீளத்திற்கு கட்டப்பட உள்ளது. பாலம் பணிகள், ஆறு மாதம் முதல் ஓராண்டிற்குள் கட்டி முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை