ஓமலுார் : பெரியார் பல்கலையில் பொறுப்பு பதிவாளர், பொறுப்பு தேர்வு ஆணையர் பதவியை கூடுதலாக வழங்கி, 50 லட்சம் ரூபாய் வீணடிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இதுகுறித்து சேலம் பெரியார் பல்கலை ஆசிரியர் சங்க தலைவர் வைத்தியநாதன் அறிக்கை:பெரியார் பல்கலை தேர்வாணையர் கதிரவன்(பொ), உளவியல் பிரிவு தலைவராக உள்ளார். அதேபோல் பொறுப்பு பதிவாளராக இருந்து ஓய்வு பெற்ற தங்கவேல், கணினி துறை தலைவராக இருந்தார்.இவர்களுக்கு துறை தலைவர் பணிக்கு மாதந்தோறும், 2 லட்சம் ரூபாய் சம்பளம். முழு கூடுதல் பொறுப்புக்கு ஆண்டுக்கு, 4 லட்சம் ரூபாய் மிகை ஊதியம். கதிரவன், 4 ஆண்டுகளுக்கு மேலாக தேர்வாணையர் பொறுப்பில் உள்ளார். முழு கூடுதல் பொறுப்பு என்பது தவிர்க்க முடியாத, அசாதாரண நிலைக்கு மட்டும் நடைமுறைப்படுத்த முடியும். அதுவும் தற்காலிகம் எனில், 3 மாதங்கள் வரை மாற்று ஏற்பாடு செய்ய நியமிக்கலாம். நிரந்தர தேர்வாணையர் என்பது, 3 ஆண்டு பணி. அப்பதவிக்கு விண்ணப்பித்தவர்களை தேர்வு செய்யாமல் துணைவேந்தர் ஜெகநாதன், கதிரவனையே மீண்டும் அனுமதித்தது, பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. சுழற்சி முறையில் தேர்வு கண்காணிப்பாளர் பொறுப்பு வழங்கினால் பல்கலைக்கு வருமான இழப்பு தவிர்க்கப்பட்டிருக்கும். அதை செய்யாமல் துணைவேந்தர் ஜெகநாதன், கதிரவனை, முழு கூடுதல் பொறுப்பாக, 4 ஆண்டுக்கு மேல் நியமித்ததால், பேராசிரியர் ஊதியத்துடன் முழு கூடுதல் பொறுப்புக்கு ஓராண்டுக்கு, 4 லட்சம் ரூபாய் மிகை ஊதியம் பெற்று, பல்கலைக்கு, 16 லட்சம் ரூபாய் நிதியிழப்பை ஏற்படுத்தியுள்ளார். குறிப்பாக கூடுதல் பொறுப்புக்கு தேர்வாணையர், முன்னாள் பதிவாளர் தங்கவேல் ஆகியோர், பல்கலை நிதியில், 50 லட்சம் ரூபாய்க்கு மேல் பெற்றுள்ளனர். அதனால் தமிழக அரசு, நிதி தணிக்கை துறை தலையிட்டு கூடுதல் ஊதியம் பெற்றதை திரும்ப, பல்கலை நிதியில் சேர்க்க, விசாரணை குழு அமைத்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பல்கலை நிதி வீணாவதை தடுக்க அரசு, பல்கலை ஆசிரியர், தொழிலாளர் ஆட்சி குழு உறுப்பினர்கள் இணைந்த கூட்டுக்குழுவை நியமிக்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.