ஆத்துார் : ஆத்துார் அருகே காட்டுக்கோட்டையை சேர்ந்தவர் செல்வம், 50. இவரது விவசாய நிலத்தில் கிணறு வெட்டும் பணி, 6 மாதங்களாக நடந்து வருகிறது. தற்போது, 55 அடி ஆழம் வெட்டிய நிலையில், மீதி, 10 அடி வெட்டுவதற்கான பணி நடந்து வந்தது. இப்பணியை தலைவாசல், வேப்பம்பூண்டியை சேர்ந்த பழனி, 38, ஆறுமுகம், 40, அவரது மனைவி கவிதா, 37, போஜன், 50, மேற்கொண்டனர்.கவிதா, 'கிரேன்' இயக்கும் பணியில் ஈடுபட்டார். கிணற்றில் போஜன், பழனி, ஆறுமுகம், ஆழப்படுத்தும் பணி மேற்கொண்டனர். நேற்று முன்தினம் கிணற்றில் இருந்து கல், மண் கொண்ட கூடையை, 'கிரேன்' உதவியுடன் வெளியே எடுத்துக்கொண்டிருந்தபோது, 'கிரேன் போல்ட்' கட்டாகி, கூடை கிணற்றில் விழுந்தது. இதில் காயம் அடைந்த பழனி, ஆறுமுகம், போஜன் ஆகியோரை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். நேற்று போஜன் உயிரிழந்தார். ஆத்துார் ஊரக போலீசார், கிரேன் இயக்கிய கவிதா மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.