| ADDED : மே 16, 2024 04:18 AM
சேலம்: அ.தி.மு.க.,வின், சேலம் புறநகர் மாவட்ட செயலர் இளங்கோவன் தலைமையில் அக்கட்சி எம்.எல்.ஏ.,க்களான, சித்ரா(ஏற்காடு), நல்லதம்பி(கெங்கவல்லி), ராஜமுத்து(வீரபாண்டி), ஜெயசங்கரன்(ஆத்துார்) ஆகியோர், நேற்று, கலெக்டர் பிருந்தாதேவியை அவரது அலுவலகத்தில் சந்தித்தனர். அப்போது தொகுதிகளில் நிலவும் பிரச்னைகளை தெரிவித்தனர்.இதுகுறித்து சித்ரா கூறியதாவது: ஏற்காடு, சொனப்பாடியில் சாலை அமைக்க, வனத்துறையிடம், 4 ஆண்டுக்கு முன் அனுமதி பெற்று தந்தும் இதுவரை சாலை அமைக்கவில்லை. அதனால் அப்பகுதி மக்கள், 200க்கும் மேற்பட்டோர், நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் ஓட்டுப்போடாமல் புறக்கணித்துவிட்டனர். அருநுாற்று மலை கிராமத்திலும் சாலை அமைக்கப்படவில்லை. ஏற்கனவே இதுதொடர்பாக மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. தற்போது கலெக்டரை சந்தித்து மலை கிராமங்களில் சாலை அமைக்க நினைவூட்டி உள்ளோம்.ஆத்துார் தொகுதியில் சந்துக்கடைகள் எண்ணிக்கை அதிகமாகி விட்டதால் அடிக்கடி பிரச்னைகள் ஏற்படுகின்றன. அதை கட்டுப்படுத்த, அத்தொகுதி எம்.எல்.ஏ., ஜெயசங்கரன் முறையிட்டார். வீரபாண்டி, கெங்கவல்லி தொகுதிகளில் அத்தொகுதி மேம்பாடு நிதியில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சி பணிகளுக்கு, 'பில் பாஸ்' பண்ணுவதில் தாமதம் ஆவதால் ஒப்பந்ததாரர்கள் பாதிக்கப்படுவதாக, அந்த எம்.எல்.ஏ.,க்கள் தெரிவித்தனர். 'பில் பாஸ்' பிரச்னை, அனைத்து தொகுதிகளிலும் நீடிப்பதால் உடனே நிவர்த்தி செய்ய வலியுறுத்தினோம். இவ்வாறு அவர் கூறினார்.