உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மேம்பாலம் வழியே செல்லும் பஸ்கள்

மேம்பாலம் வழியே செல்லும் பஸ்கள்

தலைவாசல் : மேம்பாலம் வழியே செல்லும் அரசு, தனியார் பஸ்களால், பாலத்தின் சாலையோரம் நின்று பயணியர் பஸ் ஏறும் நிலை தொடர்கிறது. பஸ்சில் இருந்து இறங்கும் பயணியர், இருபுறமும் உள்ள சாலையை ஆபத்தான முறையில் கடந்து செல்வதால் விபத்து அபாயம் தொடர்கிறது. சேலம் மாவட்டம் தலைவாசல் பஸ் ஸ்டாண்ட் அருகே தினசரி காய்கறி மார்க்கெட் உள்ளது. தவிர போலீஸ் ஸ்டேஷன், ஆர்.ஐ., - அஞ்சல் அலுவலகங்கள், வாரச்சந்தை, வங்கிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த வழியே சேலம் - உளுந்துார்பேட்டை 4 வழிச்சாலை செல்கிறது. அச்சாலையை கடக்கும்போது தொடர்ந்து விபத்து ஏற்பட்டதால், மேம்பாலம் அமைக்க மக்கள் வலியுறுத்தினர். இதையடுத்து, 'நகாய்' மூலம், 25 கோடி ரூபாயில் மேம்பாலம், சர்வீஸ் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. கடந்த ஏப்ரல் முதல், பாலம் வழியே வாகனங்கள் சென்று வருகின்றன. ஆனால் கடந்த மாதம், மேம்பால பகுதியில் பஸ்சுக்கு காத்திருந்த பயணியர் மீது சரக்கு வேன் கவிழ்ந்து, 2 பேர் உயிரிழந்தனர்.பின், 'அனைத்து பஸ்களும் இருபுறமும் உள்ள சர்வீஸ் சாலைகளில் செல்ல வேண்டும்' என, தேசிய நெடுஞ்சாலைத்துறை மூலம் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது. ஆனால் சில அரசு பஸ்கள் மட்டும் சர்வீஸ் சாலையில் செல்கின்றன. பெரும்பாலான அரசு, தனியார் பஸ்கள், மேம்பாலம் வழியே செல்கின்றன. இதனால் மேம்பாலத்தின் சாலையோரம் நின்று, பயணியர் பஸ் ஏறும் நிலை தொடர்ந்து வருகிறது.பஸ்சில் இருந்து இறங்கும் பயணியர், இருபுறமும் உள்ள சாலையை ஆபத்தான முறையில் கடந்து செல்வதால் விபத்து அபாயம் தொடர்கிறது. அதனால், அரசு, தனியார் பஸ்கள், சர்வீஸ் சாலைகளில் செல்வதற்கு, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ