சேலம்,:சேலம், அம்மாபேட்டை வைத்தி உடையார்காட்டை சேர்ந்தவர் நேதாஜிகுமார். ஜவுளி கடையில் பணிபுரிகிறார். இவரது மனைவி நந்தினி. இவர்களது, 10 மாத பெண் குழந்தை, இனன்யா. கடந்த, 1ல் கலைச்செல்வி, எலக்ட்ரிக் தையல் இயந்திரத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தார். மாலை, 5:00க்கு, இயந்திர மின்ஒயரை இனன்யா இழுக்க, மின்சாரம் பாய்ந்தது. இதில் படுகாயமடைந்த குழந்தை, தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தது. நந்தினி நேற்று முன்தினம் கொடுத்த புகார்படி, அம்மாபேட்டை போலீசார் விசாரிக்கின்றனர். அதேபோல, சேலம், பொன்னம்மாபேட்டை, சிங்காரப்பேட்டை வாசகசாலை தெருவை சேர்ந்தவர் தர்மலிங்கம், 57. கொத்தனாரான இவர் நேற்று முன்தினம், கிச்சிப்பாளையம், மக்கான் தெருவில் உள்ள குமரேசன் ரெசிடென்சியில் பணியில் ஈடுபட்டார். அப்போது அவர், கட்டுமான பணிக்கு ஈரக்கயிற்றின் ஒரு முனையை, முதல் மாடியில் இருந்து, 2ம் மாடிக்கு வீசினார். அப்போது, கயிறு தெருவில் இருந்த மின்கம்பியில் பட, மின்சாரம் பாய்ந்ததில் மயங்கியவரை, சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். கிச்சிப்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.