உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / வெளிநாட்டில் படிக்கும் மாணவர்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்துங்க: வங்கதேசத்தில் இருந்து திரும்பிய மாணவி வலியுறுத்தல்

வெளிநாட்டில் படிக்கும் மாணவர்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்துங்க: வங்கதேசத்தில் இருந்து திரும்பிய மாணவி வலியுறுத்தல்

ஆத்துார்: ''வெளிநாட்டில் படிக்கும் மாணவர்கள் பாதுகாப்பை, மத்திய, மாநில அரசுகள் உறுதிப்படுத்த வேண்டும்,'' என, வங்கதேசத்தில் இருந்து திரும்பிய மாணவி ஜனனிப்ரியா வலியுறுத்தினார்.வங்கதேசத்தில் மாணவர்கள் போராட்டத்தால், அங்கு படித்துவந்த வெளிநாட்டை சேர்ந்தவர்கள், அந்தந்த நாட்டுக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர். அதன்படி அங்கு மருத்துவம் படிக்கும், சேலம் மாவட்டம் ஆத்துாரை சேர்ந்த, த.மா.கா., மாநில இளைஞர் அணி பொதுச்செயலர் சத்யா - சண்முகம் மகளான ஜனனிப்ரியா, நேற்று அதிகாலை, 2:00 மணிக்கு சொந்த ஊர் வந்தார். அவரை பார்த்து பெற்றோர் நிம்மதி அடைந்தனர்.இதுகுறித்து ஜனனிப்ரியா கூறியதாவது: வங்கதேசம், போக்ராவில் உள்ள அரசு மருத்துவ கல்லுாரியில், 2ம் ஆண்டு எம்.பி.பி.எஸ்., படிக்கிறேன். அங்கு சுதந்திர போராட்ட வீரர்களின் குழந்தைகளுக்கு அரசு வேலையில் இடஒதுக்கீடு தொடர்பாக போராட்டம் நடந்தது. அப்போது மாணவர்கள் மீது தாக்குதல், போலீசார் மீது மாணவர்கள் தாக்குதல், குண்டு போடுதல் உள்ளிட்ட அசம்பாவிதங்கள் நடந்தன. இதனால் கடந்த, 17 முதல், கல்லுாரிக்கு விடுமுறை விடப்பட்டது. விடுதியை பூட்டிவிட்டனர். 21ல், தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த, 300 மாணவர்களை, இரு போலீஸ் வாகன உதவியுடன், 7 பஸ்கள் மூலம் இந்திய எல்லையான ஹில்லியில் விட்டனர்.எங்கள் நிலை குறித்து செய்தி வெளியானதும் தமிழக அரசு உதவியுடன், 22 மதியம், 3:00 மணிக்கு கோல்கட்டாவில் இருந்து விமானம் மூலம் சென்னையை அடைந்தோம். அங்கிருந்து வீடுகளுக்கு செல்ல, கார் ஏற்பாடு செய்து தமிழக அரசு அனுப்பியது.ஆனால், கலவரம் குறித்த வீடியோவை பார்த்து பதறினோம். ஒரு கட்டத்தில் இந்தியர் என சொன்னாலே அடிக்கத்தொடங்கினர். 'நீங்கள் இங்கு வந்து படிப்பதால் தான், எங்களுக்கு படிப்பதில் பிரச்னை உள்ளது' என்றனர். காஷ்மீரை சேர்ந்தவரை அடித்து கொன்றதாக கூறுகின்றனர். அவரது மரணத்துக்கு பின் இந்திய மாணவர்களை வெளியேறும்படி கூறினர்.சிலருக்கு, 'விசா' முடிந்ததால் அவசரமாக, 'விசா' பதிவு செய்து அனுப்பினர். கல்லுாரி திறந்ததும் அங்கு தொடர்ந்து படிக்க, எங்களுக்கு பாதுகாப்பு வேண்டும். மத்திய, மாநில அரசுகள், வங்கதேசத்துடன் பேசி தீர்வு காண வேண்டும். வெளிநாடுகளில் படிக்கச்செல்லும் மாணவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள், பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்.இங்கு மருத்துவம் படிக்க, 1 கோடி ரூபாய்க்கு மேல் செலவாகிறது. அங்கு செலவு குறைவு என்பதால் சென்றோம். எந்த நாட்டில் இந்திய மாணவர்கள் படித்தாலும் அவர்களுக்கு பாதுகாப்பு வேண்டும். 10,000 இந்தியர்களில், 2,000 பேர் வந்துள்ளோம். மீதி உள்ளவர்களுக்கும் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை