ஆத்துார் : ஆத்துார், தலைவாசல், வீரகனுார், கெங்கவல்லி, தம்மம்பட்டி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தக்காளி, கத்தரி, புடலை, பீர்க்கன், மிளகாய் உள்ளிட்ட காய்கறி சாகுபடி செய்யப்படுகிறது. இவற்றை தலைவாசல் தினசரி காய்கறி மார்க்கெட், ஆத்துார், நரசிங்கபுரம் பகுதிகளில் உள்ள தனியார் மண்டி, வாரச்சந்தைகளில் விற்கின்றனர்.கோடை வெயிலால் தக்காளி வரத்து வெகுவாக குறைந்தது. ஆனால் இரு வாரங்களாக மழையால் தக்காளி உள்ளிட்ட காய்கறி அழுகி, அறுவடை செய்ய முடியாத நிலை உள்ளது. தினசரி காய்கறி மார்க்கெட், தனியார் மண்டிகளுக்கு, தக்காளி, கத்தரி உள்ளிட்ட காய்கறி வரத்து குறைந்து விலை உயர்ந்து வருகிறது.நேற்று ஆத்துார் தனியார் காய்கறி மண்டியில், 27 கிலோ தக்காளி பெட்டி, 800 ரூபாய், 17 கிலோ பெட்டி, 500 ரூபாய், ஒரு கிலோ, 30 முதல், 35 ரூபாய்க்கு விற்பனையானது. வெளிமார்க்கெட்டில் கிலோ, 40 முதல், 45 ரூபாய்க்கு விற்பனையானது.ஆனால் கடந்த, 22ல், 27 கிலோ தக்காளி பெட்டி, 700 ரூபாய், 17 கிலோ பெட்டி, 400 ரூபாய், கிலோ தக்காளி, 20 முதல், 25 ரூபாயாக இருந்தது. அதேபோல் பீர்க்கன், புடலை கிலோ தலா, 60 ரூபாய்; கத்தரிக்காய் கிலோ, 40 ரூபாய்; வெண்டை, 35 முதல், 40 ரூபாய்க்கு விற்பனையானது. இவை வெளி மார்க்கெட்டில் கிலோவுக்கு, 5 முதல், 10 ரூபாய் வரை கூடுதல் விலைக்கு விற்பனையானது. கோடை மழைக்கு பின் காய்கறி வரத்து குறைந்து விலை உயர்ந்துள்ளது.