உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பல்லுயிர் பெருக்கத்துக்கு உதவும்:தேனீக்களை பாதுகாக்க அறிவுரை

பல்லுயிர் பெருக்கத்துக்கு உதவும்:தேனீக்களை பாதுகாக்க அறிவுரை

வீரபாண்டி;சேலம் மாவட்ட வேளாண் இணை இயக்குனர் சிங்காரம் அறிக்கை:சுற்றுச்சூழல் அமைப்புகளில் பல்லுயிர் பெருக்கத்துக்கு தேனீக்கள் முக்கிய பங்காற்றுகின்றன. காட்டுப்பூக்கள், பிற தாவரங்களில் வளர்ச்சிக்கு மகரந்த சேர்க்கைக்கு தேனீக்கள் உதவுகின்றன. விவசாயத்தில் தேனீக்கள் வளர்ப்பை ஊக்குவித்தால் தேன் சேகரிப்புக்கு மட்டுமன்றி அயல் மகரந்த சேர்க்கைக்கும் வேளாண் உற்பத்தியை அதிகரிக்கவும் உதவி புரியும். தேனீக்கள் மூலம் பயறு வகை பயிர்கள், எண்ணெய் வித்துகள், காய்கறி பழ பயிர்களில் அயல் மகரந்த சேர்க்கையை தேனீக்கள் செய்வதால் கூடுதல் தரம், மகசூல் அதிகம் கிடைக்கிறது.சூரியகாந்தி, எள், கடுகு போன்ற எண்ணெய் வித்து பயிர்களில் தேனீக்களால் விதை மகசூல் கூடுதலாவதோடு, எண்ணெய் சத்து, புரத அளவு, விதையின் எடை ஆகியவை அதிகரிக்கிறது. தென்னந்தோப்புகளில் தேனீ பெட்டிகளை வைப்பதால் நெட்டை ரக தென்னை மரங்களில் குரும்பை உதிர்வது குறைந்து, 13 சதவீத காய்ப்பு அதிகமாகிறது. வெளிநாடுகளில் தேனுக்கு மட்டுமின்றி அயல் மகரந்த சேர்க்கை நடப்பதற்கும் திட்டமிட்டு தேனீக்களை வளர்த்து வருகின்றனர். அதேபோல் நாமும் ஒருங்கிணைந்த பண்ணையத்திலும், இயற்கை விவசாயத்திலும் தேனீ வளர்ப்பு செய்வதால் கூடுதல் மகசூல் இலக்கை எட்ட உதவியாக இருக்கும். மனிதர்களுக்கு பல வழிகளிலும் உதவியாகவும், விவசாயம், பல்லுயிர் பெருக்கத்துக்கும் முக்கிய காரணியாக விளக்கும் தேனீக்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும், பாதுகாக்கவும், ஐ.நா., சபை, 2018 முதல் மே, 20ம் தேதியை தேனீக்கள் தினமாக அறிவித்து கடைப்பிடிக்கிறது. அதனால் மனிதன், விவசாயிகளுக்கு பல்வேறு உதவிகள் செய்யும் தேனீக்களை பாதுகாக்க விவசாயிகள் முன்வர வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !